வடக்கு மக்கள் சமஷ்டி கோரக் கூடாது என சொல்ல தெற்கில் உள்ளவர்களுக்கு உரிமை இல்லை :அமைச்சர் மனோ கணேசன்
கடந்த காலத்தினைப் பற்றி பேசிக்கொண்டிருக்காமல் எமது எதிர்காலம் பற்றியும் சிந்தித்து பேச வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம் என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.தமிழர் விடுதலை இயக்கதின் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 30 ஆவது நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,
வட மாகாண சபையின் சமஷ்டி குறித்த தீர்மானத்திற்கு எதிராக தெற்கில் பல கோசங்கள் எழுப்பப்பட்டிருந்தாலும், காலியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண சபையினால் சமஷ்டி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதென்றால் ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அவ்வாறு ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார் என்றால், அவர் சம்ஷ்டி முறையினை ஏற்றுக்கொண்டிருக்கின்றார் என்று அல்ல.
சமஷ்டி முறையிலான கோரிக்கையினை முன்வைப்பதற்கு வடக்கு மாகாண சபைக்கு முழு உரிமை இருக்கின்றது.
தெற்கில் இருந்து ஒற்றையாட்சி வேண்டுமென்று கேட்கின்றார்களாயின், சமஷ்டி தேவை என கோரிக்கை விடும் உரிமை வட, கிழக்கு மக்களுக்கு இருக்கின்றதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெற்கில் உள்ள சில முட்டாள் இனவாதிகள், ஒற்றையாட்சியை வலியுறுத்துவதனால், வடக்கில் சம்ஷடியை வலியுறுத்தி நாட்டில் பிளவினை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டுகின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்..
அத்தோடு அரசியல் அமைப்பு மக்களினால் உருவாக்கப்படுவது, அரசியல் அமைப்பு மாற்றப்பட முடியாததல்ல, மாற்றப்படக்கூடியது என்று தெரிவித்துள்ளார்.
சமஷ்டி கோருவதற்கு வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு உரிமை இல்லை எனக் கூறுவதற்கு தெற்கில் உள்ள எவனுக்கும் உரிமை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் காணிகளை சுவீகரிப்பதற்கான எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது. மேல் மட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் முழுமையாக கீழ் மட்டத்திற்கு செல்லவில்லை என்பதனை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைகள் கீழ் மட்டத்திற்கு சென்றடையாத காரணத்தினால், இராணுவம் மற்றும் பொலிஸ், உட்பட அரச அதிகாரிகள் சிலர் தான்தோன்றித் தனமாக செயற்படுகின்றார்கள் என குற்றம் சுமத்தினார்.
வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் இவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.
காணி சுவீகரிப்புக்கு எதிராக தேசிய அளவில் போராட்டங்களை செய்யாது, சர்வதேச ரீதியில் போராட்டங்களை முன்னெடுங்கள். இவ்வாறு ஐனநாயக போராட்டங்களின் மூலம் தான், அடிமட்ட அதிகார வர்க்கத்தினரை தண்டிக்க முடியும் என சுட்டிக்காட்டினார்.
மக்கள் எந்த மாற்றத்தினையும் பெறவில்லை, அரசாங்கம் மக்களுக்கு எதிராக செயற்படுகின்றார்கள் என்றால், ஒரு நிமிடமும் இந்த அரசாங்கத்திற்குள் இருக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இன்று ஆயுதப் பேராட்டம் முடிவடைந்து விட்டது. ஐனநாயக போராட்டம், சாத்வீக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படவுள்ளது. சமஷ்டியை பெறுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், வடக்கு மாகாண சபையும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply