பனாமா பேப்பர்ஸ் புதிய பட்டியலில் மேலும் 2 ஆயிரம் இந்தியர்களின் முறைகேடான நிதிகுவிப்பு அம்பலம்
பனாமா நாட்டை சேர்ந்த பிரபல சட்ட நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளில் கள்ளத்தனமாக பணம் மற்றும் சொத்துகளை குவித்து வைத்துள்ள மேலும் 2 ஆயிரம் இந்தியர்களின் பெயர்கள் அடங்கிய புதிய பட்டியல் தற்போது வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பின் 100 செய்தியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளின் பிரபல அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் முறைகேடான வழியில் பனாமா நாட்டு வங்கிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் பதுக்கிய சொத்து மற்றும் பணம் பற்றி ரகசியமாக தகவல்களை திரட்டி வந்தனர்.
இந்த தகவல்களை ஆதாரத்துடன் ஜெர்மனி நாளிதழ் ஒன்று ‘பனாமா ஆவணங்கள்’ என்ற பெயரில் கடந்த மாதம் வெளியிட்டு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 40 ஆண்டுகளில் பனாமா நாட்டில் 2 லட்சத்து 14 ஆயிரம் நிறுவனங்களில் பணத்தை பதுக்கிய உலக நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் இந்த மெகா பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். ’மொசாக் ஃபொன்சேகா’ என்ற நிதி ஆலோசனை மற்றும் சட்ட நிறுவனத்தின் மூலமாக இவர்கள் பனாமாவில் குவித்த சொத்து மற்றும் பணம் பலஆயிரம் கோடி லட்சம் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை உலகில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பனாமா நிறுவனத்தின் கைவசம் இருந்த இந்த ஆவணங்களில் சில பகுதிகளை ரகசியமாக, ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பினர் வெளியிட்டனர்.
பணம் பதுக்கியவர்களில் முன்னாள், இந்நாள் பிரதமர்கள், ஹாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என பலரும் அடங்குவர். பனாமா பேப்பர்ஸ் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்களது பதவியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், பனாமா ஆவணங்களில் இடம் பெற்றுள்ள மேலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெயர்களை தங்களது offshoreleaks.icij.org வலைதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து, உலக நாடுகளில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட 3 லட்சத்து 68 ஆயிரம் பேரின் பெயர்களை தற்போது இந்த இணையதளத்தில் காண முடிகிறது.
அந்த இணையதளத்தில் மேலோட்டமாக பார்வையிட்டதில் இந்த புதிய பட்டியலில் இந்தியாவை சேர்ந்த சுமார் இரண்டாயிரம் பெரும்புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவை சேர்ந்த 22 வெளிநாட்டு நிறுவனங்களின் அதிபர்கள், 1046 அதிகாரிகள் மற்றும் உள்நாட்டில் வசிக்கும் 828 பேர்களின் முகவரிகள் இந்த புதிய பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்கள் மட்டுமல்லாமல் வடமாநிலங்களில் வறுமையால் பாதிக்கப்பட்ட சில புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களின் பெயர்களும் இதில் காணப்படுகிறது.
இதற்கு முன்னர் முதன்முறையாக வெளியான ‘பனாமா லீக்ஸ்’ பட்டியலில் காணப்பட்ட 500 இந்தியர்களின் பெயர்களை சேகரித்துள்ள இந்திய வருமான வரித்துறை, வெளிநாட்டு நிதி பரிவர்த்தனை தடுப்பு மற்றும் வரி விதிப்புத்துறை, பொருளாதார அமலாக்கப்பிரிவு துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் மேலும் சுமார் 2 ஆயிரம் இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply