பனாமா லீக்ஸ் விவகாரம்: நவாஸ் ஷெரீப்புடன் ராணுவ தளபதி சந்திப்பு
மத்திய அமெரிக்க நாடான பனாமா மற்றும் உலக நாடுகளின் போலி நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறி 2 லட்சத்து 14 ஆயிரம் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் பெயர் விவரங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பெயரும் இடம் பெற்றிருந்தது. அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் பெயரில் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள சொத்துக்களின் விவரங்கள் இந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.
இது பாகிஸ்தான் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. பிரதமர் குடும்பத்துக்கு எதிராக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால் பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ரகீல் ஷெரீப், பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது பனாமா லீக்ஸ் விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்குமாறு நவாஸ் ஷெரீப்பை அவர் கேட்டுக்கொண்டார்.
பனாமா ஆவணங்களில் நவாஸ் ஷெரீப்பின் பெயரும் வெளியாகி உள்ளதால் பாகிஸ்தான் அரசின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் இருப்பதாக ராணுவ தளபதி கருதுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply