ஊழலுக்கு எதிரான லண்டன் மாநாடு: உண்மையில் பலனளிக்குமா?

londonஐக்கிய ராஜ்ஜியம், ஆப்கானிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட ஆறு நாடுகள் தமது நாடுகளில் செயற்படும் நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் யார் என்பதை வெளியிடுவதற்கு ஒப்புக்கொண்டிருக்கின்றன.லண்டனில் நடக்கும் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.மேற்குலகின் சட்டவிரோத போதைமருந்து சந்தையே ஆப்கானிஸ்தானில் ஊழலை ஊக்குவிப்பதாக ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி தெரிவித்திருக்கிறார்.

ஆப்கனும் நைஜீரியாவும் மோசமான ஊழல் நாடுகள் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து அஷ்ரஃப் கனி இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

“உலகில் நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளுக்கு மூலமாக இருப்பது ஊழல் என்னும் புற்றுநோய் என்றே நம்புகிறேன். நாடுகள் வறுமையில் இருந்து விடுபட்டு செல்வந்த நாடுகளாக வேண்டுமானால் நாம் ஊழலை ஒழிக்கவேண்டும்”, என்று தெரிவித்தார் டேவிட் கேமரன்.

நிதி மோசடிகளைத்தடுப்பதில் பிரிட்டன் முன்னணி பாத்திரம் வகிக்கும் என்றும் அவர் கூறினார்.

பிரிட்டனின் குடியிருப்புகள் உள்ளிட்ட சொத்துக்களில் ஊழல் பணம் முதலீடாவதை தடுப்பதற்கான புது அறிவிப்புடன் இதை அவர் ஆரம்பித்திருக்கிறார்.

பிரிட்டனில் சொத்துவாங்கும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர் யார் என்பது தெரிந்தால் மட்டுமே அவை இனி முதலீடு செய்ய அனுமதிக்கப்படுமென அறிவித்திருக்கிறார்.

ஆனால் பிரிட்டனுடன் தொடர்புடைய கேமென் தீவுகள் மற்றும் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் போன்ற வரிவிலக்கு சொர்க்கபுரிகளை, தான் வலியுறுத்தும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வைக்க இதுவரை அவரால் இயலவில்லை.

எனவே ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன்னர் கேமரன் இதை சரிசெய்யவேண்டுமென ஊழல் எதிர்ப்பாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.

“ஊழல் மலிந்த நாடுகள் உலகில் இருப்பதைப்போலவே அந்நாடுகளின் ஊழல்வாதிகளுக்கு ஏகத்துக்கு ஒத்துழைக்கும் சிலநாடுகளின் கடல்கடந்த பிராந்தியங்களும் இருக்கின்றன. ஒரு நாணயத்தின் இருபக்கமாக செயற்படும் இந்த இரண்டின் மீதும் சமஅளவில் கவனம் செலுத்தினால் மட்டுமே இதுபோன்ற மாநாடுகளால் உரிய பலன் ஏற்படும்”, என்கிறார் ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளர் அட்ரியன் லொவெட்.

உலக செல்வந்தர்கள் போலி நிறுவனங்கள் மூலம் எப்படியெல்லாம் தம் பணத்தை பொதுமக்களிடமிருந்து மறைக்கிறார்கள் என்பதை சென்றமாதம் வெளியான பனாமா ஆவணங்கள் வெளிப்படுத்தின.

அதைத்தொடர்ந்து உடனடியாக இப்படியொரு ஊழல் ஒழிப்பு மாநாட்டை கூட்டியமைக்காக டேவிட் கேமரன் சிலரால் பாராட்டப்படலாம். ஆனால் பிரிட்டனின் சொந்தத்தீவுகள் வரிவிலக்காளர்களின் சொர்கமாக செயற்படுவதை அவரால் மாற்ற முடியுமா என்பதே கேள்வி.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply