துருக்கியில் குண்டுவெடிப்பில் சிக்கி 4 பேர் பலி
துருக்கி நாட்டில் குர்த் இனத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் அரசுக்கு எதிராக வன்முறை மற்றும் ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள சரிகாமிஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் (உள்ளூர் நேரப்படி) நேற்றிரவு சுமார் 10.30 மணியளவில் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியை சேர்ந்த சிலர் ஒரு சிறிய வேனில் வெடிகுண்டுகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ஒரு குண்டு வெடித்து, சிதறியது. இதனால், அடுத்தடுத்து மற்ற குண்டுகளும் வெடித்தன.
இந்த விபத்தில் சிக்கிய 4 குர்திஸ்தான் போராளிகள் உடல் சிதறி பலியாகினர். இவர்கள் அனைவரும் வெடிகுண்டு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது. படுகாயமடைந்த பதினைந்துக்கும் அதிகமானோர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த குண்டு வெடிப்பால் அப்பகுதியில் உள்ள வீடுகள் சேதமடைந்தன. அந்த கிராமத்துக்கு செல்லும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply