பிரேசில் நாட்டின் தற்காலிக அதிபராக மைக்கேல் டெமெர் பதவியேற்றார்
லத்தீன் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் தில்மா ரூசெப் (வயது 68) என்ற பெண் அதிபராக உள்ளார். அவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிற நிலையில், 2014-ம் ஆண்டு மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்காக நாட்டின் பொருளாதார நிலைமை சிறப்பாக உள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக, நாட்டின் வருமானத்தை உயர்த்திக்காட்டி நிதி விதிமுறைகளை தில்மா ரூசெப் மீறி விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதவிர, பிரேசில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான ‘பெட்ரோபாஸ்’ நிறுவனத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் 80 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிலான ஊழல் தொடர்பாக அந்நாட்டின் அதிபர் தில்மா ரூசெப் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், தனது அரசு உதவியாளர் என்ற அந்தஸ்துடன் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா என்பவரை புதிய மந்திரியாக தில்மா ரூசெப் நியமித்தார். வரும் 2018-ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தனக்கு பதிலாக லுலாவை களமிறக்க தில்மா ரூசெப் முடிவு செய்துள்ளதாக தெரிய வந்தது.
தனது நெருங்கிய கூட்டாளியான லுலாவை இந்த பதவியில் நியமித்து, தன்மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை தில்மா ரூசெப் மறைக்க முயல்வதாக பிரேசில் ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ள நிலையில், இந்த நியமனத்தை எதிர்த்து நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பாராளுமன்றத்தில் தில்மா ரூசெப் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்து, அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சியில் எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில், டில்மா ரூசெப் மீது கூறப்படும் பலகோடி மதிப்பிலான ஊழல் புகாரில் லுலாவின் பெயரும் இடம்பெற்றுள்ளதால், அவரது பதவி நியமனம் செல்லாது என பிரேசில் நாட்டு சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. ஊழல் வழக்குகளை எதிர்கொள்ளும் வகையில் உடனடியாக தில்மா ரூசெப்-ஐ பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு அவர் பரிந்துரைத்துள்ளார்
அவரது பதவியை பறித்து, குற்ற விசாரணை நடத்துவதற்கு பிரேசில் பாராளுமன்றத்தின் சிறப்புகுழு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இது தொடர்பான ஓட்டெடுப்பில், தில்மா ரூசெப்புக்கு எதிராக 38 பேரும், ஆதரவாக 27 பேரும் வாக்களித்தனர்.
இதனால் அவரது பதவியை பறிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் குற்ற விசாரணை தீர்மானம் கொண்டு வந்து, நிறைவேற்றப்பட்டது. அவர் 6 மாத காலத்துக்கு அதிபர் பதவியில் இருந்து விலகி இருந்து, விசாரணையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று தில்மா ரூசெப் தற்காலிக (6 மாதங்களுக்கு) பதவிநீக்கம் செய்யப்பட்டார். துணை அதிபராக இருந்துவந்த மைக்கேல் டெமெர், பிரேசில் நாட்டின் தற்காலிக அதிபராக இன்று பொறுப்பேற்று கொண்டார்.
தனக்கு அடுத்த முக்கிய பதவியான நாட்டின் நிதியமைச்சர் பொறுப்பில் முன்னாள் மத்திய வங்கி தலைவர் ஹென்ரிக் மெய்ரெல்ஸ் என்பவரை அவர் நியமித்துள்ளார்.
தில்மா ரூசெப் மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த பல மந்திரிகளை பதவிநீக்கம் செய்து, புதியவர்களை நியமிக்கும் ஆலோசனையில் தற்காலிக அதிபர் மைக்கேல் டெமெர் ஈடுபட்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 21 புதிய மந்திரிகளை அவர் தேர்வு செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply