சிரியா மருத்துவமனையை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் – அதிபர் ஆதரவு படையினர் 20 பேர் பலி
சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வந்தது. அங்கு அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் இடையே நடந்து வந்த இந்த உள்நாட்டுப்போரில் 2½ லட்சம் பேர் கொல்லப்பட்டனர். 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உயிருக்கு அஞ்சி பிற நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர்.அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 17 நாடுகளின் தலைவர்கள் ஜெர்மனியில் கூடிப்பேசியதின் விளைவாக அங்கு கடந்த பிப்ரவரி மாத இறுதியில் சண்டை நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு அல்கொய்தா தீவிரவாதிகள் ஆதரவு பெற்ற அல் நுஸ்ரா தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ள பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. குண்டு சத்தம் ஓய்ந்தது.
இருப்பினும் அந்த நாட்டின் முக்கிய நகரமான அலெப்போ நகரத்திலும், அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்காமல் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படைகள் தாக்குதல் நடத்துவதாகக் கூறி கிளர்ச்சியாளர்களும் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இன்னொரு பக்கம் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் அங்கு எண்ணெய் வளமிக்க டெய்ர் எஸ்ஸார் நகரில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அல் ஆசாத் மருத்துவமனையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.
அவர்களை எதிர்த்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிபர் ஆதரவு படையினர் சண்டையிட்டனர். ஆனாலும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.
இந்த சண்டையின் முடிவில் அதிபர் ஆதரவு படையினர் 20 பேர் உயிரிழந்தனர். அந்த மருத்துவமனையையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தனர். அதன் ஊழியர்களையும் பணயக்கைதிகளாக பிடித்தனர்.
இந்த சண்டையின்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் தரப்பில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே டெய்ர் எஸ்ஸார் நகரின் 60 சதவீதத்துக்கும் அதிகமான பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்துவிட்டனர்.
இந்த நிலையில் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த அல் ஆசாத் மருத்துவமனையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி இருப்பது அரசு படைகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply