ஈராக் தலைநகரை நிலைகுலையச் செய்த குண்டுவெடிப்பு: 58 பேர் பலி
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். குறிப்பாக ஷியா பிரிவினர் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து உக்கிரமான தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில் இன்று பாக்தாத்தை நிலைகுலையச் செய்யும் வகையில் 3 வெடிகுண்டு தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்தினர். அல் ஷாப் மார்க்கெட்டில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதனால் மார்க்கெட்டுக்கு வந்திருந்த பொதுமக்கள் பலர் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.
அவர்களுக்கு உதவி செய்வதற்காக பொதுமக்கள் திரண்டு வந்தபோது கூட்டத்திற்குள் புகுந்த பெண் தற்கொலைப்படை தீவிரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதனால், மேலும் பலர் உடல் சிதைந்து பலியாகினர். பலர் படுகாயங்களுடன் துடிதுடித்தனர்.
இந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு சந்தையில் உள்ள கார் வெடிகுண்டை தற்கொலைப்படை தீவிரவாதி வெடிக்கச் செய்தான்.
தலைநகரை உலுக்கிய இந்த சம்பவத்தில் குறைந்தது 58 பேர் பலியானதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply