உலகம் முழுவதும் வாழும் பௌத்தர்களுக்கு இன்று வெசாக் தினமாகும்
உலகம் முழுவதும் வாழும் பௌத்தர்களுக்கு இன்று ஒரு புனிதமான நாளாகும். நேபாளத்தின் லும்பினியில் கபிலவஸ்து என்ற நாட்டின் அரசனான சுட்தோத்தனாவுக்கும் அவன் மனைவி மாயாவுக்கும் மகனாக கி.மு. 563 இல் அவதரித்து சித்தார்த்தன் என்ற பெயரைக்கொண்ட பௌத்தம் என்ற தத்துவத்தின் நிறுவுனரான கௌதம புத்தர் பிறந்த நாளாகும். லௌகீக வாழ்வை துறந்து மகா ஞானியாக உருவான புத்தர் பிரான் அவதரித்த இந்த நாள், புத்த பூர்ணிமா, புத்த ஜெயந்தி அல்லது வெசாக் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
அரண்மனையின் ஒரே ஆண் வாரிசு என்பதால் உலகத் துன்பங்கள், கவலைகள் என எதுவும் தெரியாதவராக வளர்க்கப்பட்டார்.
தனது 29 வது வயதில் வெளி உலகைக் கண்டவர் துயரம் நிறைந்த உலக மக்களின் வாழ்க்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்து , துக்கத்துக்கான காரணம் தேடி அலைந்தார். முடிவில் சித்தார்த்தன் போதி மரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டுகள் தவம் செய்தார்.
தனது பிறந்த நாளான அதே வெசாக் முழு நிலவு நாளில் ஞானம் பெற்று தனது கேள்விகளுக்கான விடையினைக் கண்டறிந்து கொண்டார். அதன் பின்னர் அவர் கௌதம புத்தர் என அழைக்கப்பட்டார்.
ஆசையே அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்பதை கண்டறிந்து பல இடங்களுக்கும் சென்று இவற்றை போதித்தார். கி.மு. 483 ல் தனது 80 வது வயதில் தனது பிறந்த நாளும், தான் ஞானத்தை அடைந்த நாளுமான வெசாக் தினத்தன்று புத்தர் இவ்வுலக வாழ்வைத் துறந்தார்.
புத்தர் போதித்த துக்க நிவாரண போதனைகளே இன்று பௌத்தம் என்னும் மகா தத்துவமாக உலகம் முழுவதும் வியாபித்து நிற்கின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply