பாபர் மசூதி இடிப்புக்கு பழிக்குப்பழி வாங்குவோம்: ஐ.எஸ். தீவிரவாதிகளின் புதிய வீடியோவால் பரபரப்பு

isisஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி அட்டூழியம் செய்துவரும் இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இந்தியாவை சேர்ந்த சிலரும் இடம்பெற்றுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இவர்களில் ஒரு குழுவினர் சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் படைகளை எதிர்த்து, அங்கு போரில் ஈடுபட்டுள்ளனர்.இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் இங்குள்ள பல்மைரா நகரில் அரசுப்படைகளுடன் நடந்த மோதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த சில இந்தியர்கள் பலியானதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்பு மற்றும் காஷ்மீர், குஜராத்தில் நடந்த முஸ்லிம்கள் படுகொலைக்கு பழிக்குப்பழி வாங்குவோம் என இங்கு போர்க்களத்தில் இருக்கும் இந்தியாவை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள புதிய வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுமார் 20 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் தானியங்கி துப்பாக்கியுடன் இந்தியாவை சேர்ந்த சில ஐ.எஸ். தீவிரவாதிகள் அராபிய மொழியில் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மும்பை அருகேயுள்ள தானே பகுதியில் இருந்து சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். படையில் சேர்ந்திருக்கும் பஹத் தன்வீர் ஷேக் என்ற வாலிபன், ‘கையில் வாளுடன் நாங்கள் இந்தியாவுக்கு திரும்பி வருவோம். பாபர் மசூதி இடிப்பு, காஷ்மீர், குஜராத் மற்றும் முசாபர்நகரில் நடந்த முஸ்லிம்கள் படுகொலைக்கு பழிக்குப்பழி வாங்குவோம் என்று சபதமேற்கிறான். தானேவில் இருந்து தன்னுடன் சிரியாவுக்கு வந்து, அரசுப்படையுடனான மோதலில் பலியான தனது நண்பன் ஷஹிம் தன்கி-யின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தும் காட்சியும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இதில் தோன்றும் மற்றொரு தீவிரவாதி, கடந்த 2008-ம் ஆண்டு டெல்லி, ஜாமியாநகர் பாட்லா ஹவுஸ் பகுதியில் இந்திய முஜாஹிதீன் தீவிரவாதிகள்மீது ராணுவம் நடத்திய தாக்குதலில் தப்பி, உயிர் பிழைத்துவந்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளதாக கூறுகிறான்.

இந்தியாவில் உள்ள இந்துக்கள் உங்களை மதம்மாற்றி விடுவார்கள். எனவே, நீங்கள் அனைவரும் இந்தியாவைவிட்டு சிரியாவுக்குவந்து ‘ஜிஹாத்’ என்னும் புனிதப்போரில் குதிக்க வேண்டும் என ஒரு தீவிரவாதி வேண்டுகோளும் விடுத்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply