வங்காளதேசத்தில் ரோனு புயலுக்கு 15 பேர் பலி: கடலோர பகுதிகளில் கனமழை – விமான சேவை பாதிப்பு

bangaவங்கக்கடலில் உருவான ரோனு புயல் இலங்கையில் கடலோர பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கனமழை மற்றும் நிலச்சரிவால் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். இதன் தாக்கத்தால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்தது.இந்த ரோனு புயல் ஒடிசாவில் கரை கடக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தற்போது அது வங்காளதேசத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

சிட்டகாங் துறைமுகத்திற்கு தென்மேற்கில் 140 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல் இன்று பிற்பகல் பரிசால்-சிட்டகாங் இடையே கரையை கடக்கலாம் என வானிலை மையம் கூறியிருந்தது. இந்த புயலின் தாக்கம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கடுமையாக காற்று மற்றும் இடியுடன்கூடிய கனமழை பெய்து வருகிறது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் பாதிப்பு உள்ள 13 கடலோர மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புயல் கரையை கடக்கும் முன் சுமார் லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இருப்பினும் சில இடங்களில் மழை மற்றும் நிலச்சரிவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சூறாவளிக் காற்றினால் போலா கடற்கரை கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடிசைகள் சேதமடைந்தன. இதில் 2 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிட்டகாங்கில் நிலச்சரிவில் சிக்கி தாய், மகள் பலியாகினர். பதுவாக்காலி பகுதியில் ஒருவர் பலியாகி உள்ளார். இதுதவிர மேலும் சில பகுதிகளிலும் உயிர்ப்பலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாலை நிலவரப்படி மொத்தம் 15 பேர் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரோனு புயல் காரணமாக சிட்டகாங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply