எகிப்து விமானம் கடலில் விழுவதற்கு முன் கேபின் அறையில் புகை வெளிப்பட்டதாக தகவல்

airபிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் இருந்து எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவுக்கு புதன்கிழமை ஈஜிப்ட் ஏர் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 56 பயணிகள், 7 சிப்பந்திகள், 3 பாதுகாவலர்கள் என 66 பேர் பயணம் செய்தனர். கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் எகிப்து வான்பிரதேசத்தில் அந்த விமானம் நுழைந்து, 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது  திடீரென ரேடாரில் இருந்து மறைந்து மாயமானது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மாயமான அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாக சில மணி நேரத்தில் தெரிய வந்தது. 

 

இதையடுத்து மத்திய தரைக்கடல் பகுதியில் விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். இதில், விமானத்தின் சிதைவு பாகங்கள், உடல்கள், பயணிகளின் உடைமைகள், விமான இருக்கைகள் ஆகியவற்றை எகிப்து ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர். இருப்பினும், விமானத்தின் கருப்பு பெட்டி இன்னும் கண்டறியப்படவில்லை.

 

இந்தநிலையில், விமானம் தொடர்பை இழப்பதற்கு சில விநாடிகளுக்கு முன் அதன் கேபினுக்குள் புகை வெளிப்பட்டதாக விமான துறைகள் பற்றிய செய்திகளை வெளியிடு அவியேஷன் ஹெரால்டு என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியில், விமானத்தின் கழிப்பறை மற்றும் மின்னணு அறையில் இருந்து புகை கிளம்பியது கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஆனால், விமானத்தில் புகை எச்சரிக்கை ஒலித்தது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எகிபது அதிகாரிகள் தீவிரவாத தாக்குதல் இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து இருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply