சென்னையில் கோலாகல விழா: தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இன்று பதவி ஏற்பு
தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், அ.தி.மு.க. 227 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பணப்பட்டுவாடா புகாரால், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூன்) 13-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 232 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இதைத்தொடர்ந்து, 6-வது முறையாக தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார்.
முன்னதாக, சென்னையில் கடந்த 20-ந் தேதி நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டசபை அ.தி.மு.க. தலைவராக (முதல்- அமைச்சர்) ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் அவர் கவர்னர் கே.ரோசய்யாவை சந்தித்து புதிய அரசு அமைக்க தன்னை அழைக்குமாறு உரிமை கோரினார். கவர்னரும் புதிய அரசு அமைக்க ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, மீண்டும் தமிழகத்தின் முதல்- அமைச்சராக ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று பகல் 12 மணிக்கு கோலாகலமாக நடைபெறும் பதவி ஏற்பு விழாவில், ஜெயலலிதாவுக்கு கவர்னர் கே.ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைக்கிறார்.
ஜெயலலிதா தனது அமைச்சரவையில், 28 அமைச்சர்களை நியமித்து உள்ளார். அவர்களும் இன்று பதவி ஏற்கிறார்கள். புதிய அமைச்சர்களுக்கும் கவர்னர் ரோசய்யா பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார்.
ஜெயலலிதா, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பது இது 6-வது தடவை ஆகும்.
ஏற்கனவே, 1991 முதல் 1996-ம் ஆண்டு வரையும், 2001 முதல் 2006-ம் ஆண்டு வரையும், 2011 முதல் 2016 வரையும் ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்துள்ளார். இடையில் 2 முறை அவர் பதவி விலக நேரிட்டு, மீண்டும் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதல் முறையாக முதல்- அமைச்சர் ஆனபோதும் இதே பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்தான் அவர் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விழா நடைபெறும் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
பதவி ஏற்பு விழாவில் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொள்கின்றனர். இதற்காக, 3,150 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது. புதிய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கின்றனர்.
தமிழக அரசியல் தலைவர்களுக்கு அதிகாரிகள் மூலம் நேரில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜி, உத்தரப்பிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் உள்பட பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி ஈரான் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருவதால், அவருக்கு பதிலாக மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் 32 மாவட்டங்களிலும் எல்.இ.டி. அகன்ற திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பதவி ஏற்பு விழா நிறைவடைந்ததும், மதியம் 12.45 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு செல்கிறார். அங்கு, அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை புதிதாக பதவி ஏற்ற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வரவேற்கின்றனர். தனது அறைக்கு சென்று பணியை தொடங்கும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, 2 முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கும், படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பிலும் அவர் கையெழுத்திடுவார் என தெரிகிறது.
பின்னர், போயஸ் கார்டன் இல்லத்திற்கு திரும்பும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, மதியம் 1.30 மணிக்கு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு தற்காலிக சபாநாயகராக செம்மலை பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.
இன்னும் ஒரு வாரத்தில் கூடும் சட்டசபை கூட்டத்தில், தற்காலிக சபாநாயகர் செம்மலை புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்க இருக்கிறார். அதற்கான தேதியும் இன்று முடிவு செய்யப்பட இருக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply