ஜனாதிபதிக்கு ஈ.பி.டி.பி நன்றி தெரிவிப்பு

ஈ. பி. டி. பி.யின் கோரிக்கைக்கு அமைய வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு தொலைபேசி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையங்க ளில் முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் தொடர்பில் 26 கோரிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தார்.

இது தொடர்பாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்குமிடையில் உயர்மட்டக் கலந்துரையாடலொன்று நாளை இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில், வவுனியா அரசாங்க அதிபர், பாதுகாப்பு அமைச்சின் வவுனியா இணைப்பாளர், தேசநிர்மாண அமைச்சின் வவுனியா இணைப்பாளர் ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர்.

இந்த நிலையில் தனது கோரிக்கையை ஏற்று நிவாரணக் கிராமங்களுக்கு தொலைபேசி வசதி செய்து கொடுத்தமைக்கு இடம்பெயர்ந்த மக்கள் சார்பில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதே போல, ஏனைய கோரிக்கைகளையும் ஜனாதிபதி செயற்படுத்துவாரென்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று தன்னைச் சந்தித்த பொதுமக்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply