நாட்டில் அனைவரும் சுதந்திரமாக நடமாட வழிவகுக்கப்படும்:அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன்

நாட்டில் அனைத்து இன மக்களும் எப்போதும் எங்கும் சுதந்திமாக நடமாட வழிவகுப்பதே எனது நோக்கமாகும் என புதிதாக அமைச்சுப் பொறுப்பை ஏற்றுள்ள அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான தமது அமைச்சின் செயலகத்தை நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் திறந்து வைத்து கடமைகளைப் பொறுப்பேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்.

“கடந்த இருபத்தைந்து வருட காலமாக இனங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வில்லாத ஒரு நிலை நிலவி வருகிறது. அந்த நிலையை இந்த அமைச்சின் ஊடாக மாற்றியமைக்க முயற்சிகளை மேற்கோள்வேன். இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் சிங்கள மொழியையும் சிங்கள மக்கள் அனைவரும் தமிழ் மொழியையும் கற்க வேண்டும். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்கும் பாரிய ஒத்துழைப்பாக இது அமையும்.

கடந்த காலங்களில் நெருக்கடியான யுத்த சூழ்நிலையில் சிக்கியிருந்த நான் உண்மையான சமாதானம் சுதந்திரம் என்னவென்பதை நன்கு புரிந்துகொண்டேன். நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் சிறந்த ஒரு சேவையை ஆற்றுவதற்கு நல்ல கொள்கையுடைய பெரிய ஒரு அரசியல் கட்சியில் இணைய வேண்டும் என முடிவெடுத்தேன்.

அதனால்தான் நாட்டு மக்களின் நலனுக்காக சிறந்த கொள்கையுடன் செயற்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்துள்ளேன். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாற்றத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார். தமிழ் மக்களும் மஹிந்த சிந்தனையை பெரிதும் வரவேற்கின்றார்கள். எனது சேவையை மக்கள் நலனுக்காக மேற்கொள்ள அனைத்துத் தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என அமைச்சர் முரளீதரன் மேலும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply