ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஒத்திவைப்பு

jeyaஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இறுதி வாதங்கள் முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ரிவர்வே அக்ரோ புரொடக்ட்ஸ், மீடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், லெக்ஸ் பிராபர்ட்டி டெவப்மெண்ட் பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்தோ தோகா கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட், சிக்னோரா எண்டர்பிரைசஸ் லிமிடெட் ஆகிய 6 நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்து வந்தது.

 

இந்த வழக்கில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 1-ந் தேதி நிறைவடைந்தது.

 

கர்நாடக அரசு தரப்பில் அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா, மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே, கர்நாடக அரசு வக்கீல் அரிஸ்டாட்டில் ஆகியோரும், தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பில் மூத்த வக்கீல்கள் அந்தியார்ஜூனா, விகாஸ் சிங், வி.ஜி.பிரகாசம், வக்கீல் பிரபு ராமசுப்பிரமணியம் ஆகியோரும் ஆஜரானார்கள்.

 

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் தரப்பில் மூத்த வக்கீல் நாகேஸ்வரராவ் (தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி), சேகர் நாப்டே, அரிமா சுந்தரம் ஆகியோர் ஆஜராயினர்.

 

இந்தநிலையில் நேற்று ஜெயலலிதா உள்ளிட்டோர் தொடர்பான 6 நிறுவனங்களை விடுவித்ததற்கு எதிரான மனுவின் மீது கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சித்தார்த் லுத்ரா தனது வாதங்களை முன்வைத்தார். அவர் கூறியதாவது:-

 

சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல் கர்நாடக ஐகோர்ட்டு இந்த நிறுவனங்களை விடுவித்து இருப்பது தவறானதாகும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாங்கி குவித்ததாக கூறப்படும் கடன் தொகைகள் மற்றும் சொத்துக் குவிப்பு தொடர்பான விவரங்கள் தவறாக கணக்கிடப்பட்டு இருக்கிறது.

 

குற்றவாளிகள் தாங்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்தியிருப்பது மற்றும் வங்கிகள் தந்ததாக கூறப்படும் கடன் தொகை பற்றியும் வருமானம் என்று தவறாக கணக்கிடப்பட்டுள்ளது. வருமான வரி பற்றி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தவறான கணக்குகளை ஐகோர்ட்டு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

 

ஐகோர்ட்டில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தபோது கர்நாடக அரசை பிரதிவாதியாக குறிப்பிடாமல் தமிழக அரசின் ஊழல் தடுப்புப் பிரிவை பிரதிவாதியாக குறிப்பிட்டார்கள். இது தவறானதாகும். இது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் வசதிக்காக செய்ததாகும்.

 

இந்த 6 நிறுவனங்களுக்கு இடையில் பணப்பரிமாற்றம் நடைபெற்று இருக்கிறது. இந்த பணம் அனைத்தும் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்கு சொந்தமானது. அவருடைய பணம் மற்றவர்கள் கணக்கில் காண்பிக்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் எந்தவிதமான வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. இவை அனைத்தும் பினாமியாக காண்பிக்க மட்டுமே பயன்பட்டன.

 

எனவே, மேற்காணும் 6 நிறுவனங்களை கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பில் விடுவித்தது, அடிப்படையில் தவறானதாகும். இது நீதியை திசைமாற்றும் வகையில் அமைந்து உள்ளது.

 

இவ்வாறு அவர் வாதத்தில் குறிப்பிட்டார்.

 

இதைத் தொடர்ந்து நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹரின் பி.ராவல் தன்னுடைய வாதத்தில் கூறியதாவது:-

 

சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய 6 நிறுவனங்களின் சொத்துகளை கீழ்கோர்ட்டு பறிமுதல் செய்யுமாறு பிறப்பித்த உத்தரவு சட்டப்படி தவறானது. இதுபோன்ற வழக்குகளில் குற்றவியல் நடைமுறை சட்டம் 452-வது பிரிவின் கீழ் சொத்துகளை பறிமுதல் செய்ய முடியாது. ‘கிரிமினல் அமென்ட்மெண்ட்’ அவசர சட்டத்தின் கீழ்தான் செய்திருக்க முடியும்.

 

கீழ் நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்மானித்து அந்த சொத்துகள் எல்லாம் குற்றவாளிகளால் வாங்கப்பட்டது என்று தீர்மானித்தால் அந்த குறிப்பிட்ட சொத்தில் குற்றத்தின் அடிப்படையில் ஈட்டியதாக கூறப்பட்ட தொகை எவ்வளவு என்பதை கணக்கிடவேண்டும். அதன் அடிப்படையில்தான் சொத்துகளை பறிமுதல் செய்ய முடியும். இதன் அடிப்படையில் கீழ்கோர்ட்டு செய்தது மிகவும் தவறானது.

 

மேலும் இந்த குறிப்பிட்ட நிறுவனங்களில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரில் இருவர் மட்டுமே இயக்குனர்கள் கிடையாது. இவர்களைத் தவிர பலர் இந்த நிறுவனங்களில் இயக்குனர்களாக உள்ளனர். அவர்களுக்கு சொந்தமான சொத்துகளும் இந்த நிறுவனங்களில் உள்ளது.

 

இவை அனைத்தும் ஜெயலலிதாவுக்கோ அல்லது இந்த நிறுவனங்களில் இயக்குனர்களாக குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு மட்டுமே சொந்தமானதும் அல்ல. எனவே இப்படி பறிமுதல் செய்தது தவறானதாகும். அந்த தவறை ஐகோர்ட்டு நீதிமன்ற தீர்ப்பு சரிப்படுத்தி உள்ளது. எனவே ஐகோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்யவேண்டும்.

 

இவ்வாறு ஹரின் பி.ராவல் கூறினார்.

 

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

 

மேலும் சுருக்கமான வாதங்களை எழுத்துவடிவில் வருகிற 10-ந் தேதிக்குள்(வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டனர்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply