மேலதிக ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு விற்க அரசு தீர்மானம்

ratnayakkeதேவைக்கு அதிகமாகவுள்ள ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு விற்பதற்கும் பாவனைக்கு உதவாத ஆயுதங்களை அழிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டிருப்பதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க நேற்று தெரிவித்தார். இதற்கமைய ஆயுதங்களை கொள்வனவு செய்த வெளிநாட்டு கம்பனிகளிடமே எஞ்சிய ஆயுதங்களை மீள ஒப்படைப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். நாட்டில் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் ஆயுதங்களின் பயன்பாடு அவசியமற்று இருப்பதனாலேயே அரசாங்கம் இத்தீர்மானத்துக்கு வந்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

சீத்தாவக்க பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளரொருவர் இலங்கை அரசாங்கம் ஆயுதங்களை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதா? அப்படியானால் அதற்காக அமைச்சரவைக்கு பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? என எழுப்பிய கேள்விக்களுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் சாகல ரத்நாயக்க மேற்படி பதிலளித்தார்.

 

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த வாரம் வீதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

 

இழந்த அனைத்து உடைமைகளையும் மீள்பெற்றுத் தருவதாக அவர்களிடம் நேரில் சென்று வாக்குறுதி அளிக்குமாறு ஜனாதிபதியும் பிரதமரும் விடுத்த பணிப்புரைக்கமைய நேற்று அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, சாகல ரத்நாயக்க, அநுர பிரியதர்ஷன யாப்பா, ருவன் விஜேவர்தன ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று சீத்தாவக்க பிரதேச செயலகத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர்.

 

இச்சந்திப்பினையடுத்து ஊடகவியலாளர் மாநாடொன்று நடத்தப்பட்டது.

 

கொஸ்கம சலாவர இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கு வெடிப்பில் இழக்கப்பட்ட அனைத்து உடைமைகளையும் நீதியான முறையில் மீளப்பெற்றுத் தருவதற்காக ஸ்தாபிக்கப்படவுள்ள விசேட பொறிமுறைக்கு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வீதிப் போராட்டங்களை கைவிட்டு ஒத்துழைக்க வேண்டுமென அமைச்சர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்தனர்.

 

ஆயுதக் கிடங்கு வெடிப்புச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 12 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இழக்கப்பட்ட உடமைகளை மீளப் பெற்றுக்கொள்ளும் வகையில் விசேட பொறிமுறையொன்று ஸ்தாபிக்கப்படுமென்றும் அமைச்சர்கள் கூறினர்.

 

இந்த பொறிமுறையின் கீழ் ஒவ்வொரு கிராமசேவையாளர் பிரிவுக்கும் ஒரு குழுவீதம் 12 குழுக்கள் நியமிக்கப்படும்.

 

ஒவ்வொரு குழுவிலும் ஒரு கிராமசேவை உத்தியோகத்தர், ஒரு நிவாரண சேவை உத்தியோகத்தர், ஒரு பொலிஸ் அதிகாரி, ஒரு மதிப்பீட்டு உத்தியோகத்தர், ஒரு பொறியியலாளர் ஆகியோர் நியமிக்கப்படுவர்.

 

இந்த குழு அமைச்சர்களின் கண்காணிப்பின் கீழ் செயற்படும். இதன் செயன்முறைகளை ஆராய்வதற்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் சீத்தாவக்க பிரதேச செயலகத்துக்கு வருகை தரவுள்ளதுடன் இதே அமைச்சர்கள் குழு எதிர்வரும் 20 ஆம் திகதி மீண்டும் இங்கு நேரில் வரவிருப்பதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

 

சீத்தாவக்க பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் மக்கள் மிகவும் ஆவேசமான முறையில் நடந்து கொண்டனர். வீடுகளையும் உடைமைகளையும் இழந்து வீதியில் வந்து நின்ற தம்மிடம் இராணுவ அதிகாரிகள் மிகவும் கடுமையாக நடந்துகொண்டதாகவும் அவர்கள் அமைச்சர்களிடம் முறையிட்டனர்.

 

“நாம் பயங்கரவாதிகளில்லை. வடக்கில் பயங்கரவாதிகளைப் பார்ப்பதுபோல் எம்மை பார்க்க வேண்டாம். அனைத்தையும் இழந்துள்ள எம்மிடம் மென்மையாக அணுகுங்கள்” என்றும் அம்மக்கள் தெரிவித்தனர்.

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் உள்ளிட்ட அனைத்து உடைமைகளையும் அரசாங்கம் மீளப்பெற்றுத் தரும் என்றும், பாதிக்கப்பட்டுள்ள வியாபாரங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான நட்டஈடுகள் வழங்கப்படுமென்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க இம்மக்களிடம் வாக்குறுதியளித்தார்.

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply