படையினர் வசமுள்ள மன்னார், புல்மோட்டை, பொத்துவில் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்

HAKIMவலி வடக்கில் பொதுமக்கள் காணிகள் விடுவிக்கப்படும் அதேவேகத்தில் மன்னாரிலும், புல்மோட்டையிலும், பொத்துவிலிலும் படையினர்வசமுள்ள காணிகளை விடுவிப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுகின்றோம் என்ற போர்வையில் அவசர அவசரமாக சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவற்றுக்கும் அப்பால் நிர்வாக சேவையில் உள்ள அதிகாரிகள் இனங்களுக்கிடையில் பாரபட்சமான முறையில் நடந்து கொள்வதாகவும் அவர் கூறினார்.

 

வடக்கு, கிழக்கு மீள்குடியேற்றம், காணிப்பிரச்சினை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

 

நிர்வாக சேவைக்கு மத்தியில் இனங்களுக்கிடையில் பாரபட்சமான நிர்வாக சேவைகள் தொடர்கின்றனவா என்ற கேள்வி காணப்படுகிறது. குறிப்பாக வனபரிபாலன இலாகாவின் செயற்பாடுகள் இது தொடர்பான கேள்விகளை வலுப்படுத்துகின்றன.

 

இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை கையளிக்கும் பகுதிகளில் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் வடக்கு, கிழக்கில் பல காணிகள் உள்ளன. மன்னாரில் சிலாவத்துறை கிராமம் நகர் பகுதி கடற்படை முகாமாக மாற்றப்பட்டுள்ளது. மக்களின் காணிகள் கடற்படையின் முகாமாக மாறியுள்ளது.

 

இது அங்கிருந்து அகற்றப்பட்டு முன்பிருந்த நகரம் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.

 

பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிசெய்துகொண்டு உகந்த இடத்துக்கு கடற்படை முகாமை மாற்றிவிட்டு முழு சிலாவத்துறை நகரமும் மக்களிடம் கொடுக்கப்பட வேண்டும்.

 

இது பற்றி பல தரப்பிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம். இதேபோன்று புல்மோட்டை பிரதேசத்தில் 13ஆவது கட்டை எனும் பகுதியில் உள்ள படையினர் வீடமைப்புத் தி்டடத்துக்காக 200 ஏக்கர் காணி கையகப்படுத்தப்பட்டுள்ளன.

 

இதுபோன்ற பல இடங்கள் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இராணுவத்தினர் உல்லாச விடுதிகளையும் ஹோட்டல்களையும் நடத்துவதால் போக்குவரத்து மறுக்கப்படுவது மாத்திரமன்றி மீனவர்கள் மீன்பிடிக்கக் கூட செல்ல முடியாத நிலைமையே காணப்படுகிறது. கடந்த காலத்தில் இருந்த கெடுபிடிகள் குறைந்திருந்தாலும் கெடுபிடிகள் முற்றாக இல்லாமல் போயுள்ளன என்று கூற முடியாது.

 

அதேநேரம், சில பிரதேசங்கள் ஒரு சில இனங்களை மாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக எல்லைகள் அரசாங்க அதிகாரிகளால் தீர்மானிக்கப்படுகின்றன. இது நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு வழிவகுக்காது என்றும் கூறினார்.

 

அதிகார பகிர்வு ஏற்பாடுகளில் காணி ஆணைக்குழுவொன்றை நிறுவாமல் இருக்கின்றோம்.

 

மத்திய அரசாங்கம் இதுவரை கவனத்தில் எடுக்கவில்லை. காணி தொடர்பாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல் காணப்படுகிறது. காணி ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழேயே இந்த விடயம் இன்னமும் இருக்கின்றது.

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply