அமெரிக்காவில் நேற்றிரவு தாக்குதல் நடாத்தியவர் உமர் மாதீன் : FBI
அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்ஸ் எனும் பெயரையுடைய இரவு விடுதியொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு ஆப்கானிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த வாலிபர் ஒருவரே காரணம் என தெரியவந்துள்ளது.இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய வாலிபர் உமர் மாதீன் எனும் இளைஞன், ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெற்றோருக்கு 1986-ம் ஆண்டு பிறந்தவர் எனவும், புளோரிடா மாகாணத்தின் போர்ட் செயின்ட் லூசி நகரில் வசித்து வந்தவர் எனவும் தகவல்கள் கூறுகின்றன. இவருக்கு போராளிகள் குழுக்களுடன் தொடர்பு எதுவும் இருந்ததா? என்பது பற்றி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது,
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில் ‘பல்ஸ்’ என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்பட்டு வந்துள்ளது. அந்த விடுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கேளிக்கை கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.நேற்றிரவு திடீரென அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த வாலிபர் ஒருவர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு வந்திருந்தவர்கள் உயிர் பிழைப்பதற்காக அலறியவாறு அங்குமிங்கும் ஓடியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தின்போது 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 53 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஆர்லண்டோ நகர மேயர் புட்டி டயர் பின்னர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு படை (எப்.பி.ஐ.) பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், போராளி குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம் எனவும், ஐ.எஸ். இயக்கத்துடன்கூட தொடர்பில் இருந்திருக்கலாம்” எனவும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply