கிழக்கிலும் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் : பிரதமர்.!
வட மாகாணத்தில் படையினர் வசமுள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படுவது போன்று கிழக்கு மாகாணத்திலும் விடுவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாணத்திற்கு சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அபிவிருத்தி தொடர்பாக உரையாற்றினார்.அதன் பின்னர் மாகாண சபை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற, சந்திப்பில் கிழக்கு மாகாணத்திலும் தனியார் காணிகளில் தொடர்ந்து படையினரும் பொலிஸாரும் நிலை கொண்டிருப்பது பற்றி தமிழ், – முஸ்லிம் உறுப்பினர்களினால் அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
வட மாகாணத்தில் இக்காணிகள் விடுவிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஓப்படைக்கப்படுவது போன்று கிழக்கு மாகாணத்திலும் அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரான ஜி. கிருஷ்ணபிள்ளை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
கிழக்கு மாகாணத்தில் தனியாருக்கு சொந்தமான காணிகளிலும் கட்டிடங்களிலும் பொலிஸ் மற்றும் இராணுவம் தொடர்ந்தும் நிலை கொண்டிருப்பதாகவும் ஜி. கிருஷ்ணபிள்ளை இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் முடிந்து 7 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் கிழக்கு மாகாணத்தில் காணிப் பிரச்சினை இன்னமும் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான எம். ஆர். அன்வர் இந்த சந்திப்பில் சுட்டிக் காட்டினார்.
படையினரின் தனியார் காணி ஆக்கிரமிப்பு தொடர்கின்றது என்றும் குறிப்பிட்ட அவர் குறிப்பாக புல்மோட்டை பிரதேசத்தில் கடற்படை மற்றும் இராணுவம் நிலை கொண்டுள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன் வைத்தார்.
இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.ஆர் .அன்வர் இதற்கு பொறுப்பான அமைச்சர் சரத் பொன்சேகா, மாகாண முதலமைச்சர், ஆளுனர் மற்றும் பாதுகாப்பு அமைச்சு செயலாளர் ஆகியோர் கொண்ட குழு மூலம் இந்த பிரச்சினைக்குரிய தீர்வு பெற்று தரப்படும் என பிரதமரால் பதில் வழங்கப்பட்டதாக கூறினார்.
வட மாகாணத்தில் படையினர் நிலை கொண்டுள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாரிய சவால்கள் இருந்த போதிலும் அவை விடுவிக்கப்பட்டு பொது மக்களிடம் மீள கையளிக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் கிழக்கு மாகாணத்திலுள்ள காணி விடுவிப்பது தொடர்பாக பிரதமரின் பதிலில் தாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், அன்வர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply