பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் நிறுவ அனுமதி கேட்டு பிரதமருக்கு அவசர கடிதம்

vikiவடபகுதிக்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க உத்தரவிடுமாறு கேட்டு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்க கடிதம் எழுதியுள்ளார்.இதே கோரிக்கையை திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அவர் கிராமியப் பொருளாதார அமைச்சிடமும் விடுத்திருந்தார்.அது ஏற்க்கப்படாதலை அடுத்து பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக் குளத்தில் அமைப்பது என்று வடக்கு மாகாண சபை ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் முதலமைச்சர் மீண்டும் இந்த விவகாரத்தைப் பிரதமரிடம் எடுத்துச் சென்றிருக்கின்றார்.

மத்திய அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் வவுனியாவில் பொருளாதார மையம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதற்குரிய காணியை அடையாளப்படுத்துவதில் சிக்கல் தோன்றியது. ஓமந்தையில் உள்ள மாணிக்கம் பண்ணைக் காணியில் இதனை அமைப்பதற்கு வவுனியா மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இணங்கியிருந்தனர்.

வவுனியா நகரிலிருந்து 2 கிலோ மீற்றர் பிரதேசத்தினுள்ளேயே, பொருளாதார மத்திய நிலையம் அமைக்க முடியும் என்று திட்டத்துக்கான நிதியை விடுவிக்கும் கிராமிய பொருளாதார அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது. இதனால் ஓமந்தையில் அதனை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. மாற்றுத் தெரிவாக தாண்டிக்குளம் விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் காணி பரிந்துரைக்கப்பட்டது.

தாண்டிக்குளம் காணியில் நிலையம் அமைவதை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் விரும்பியிருக்கவில்லை. இதனால் இந்தத் திட்டத்தில் இழுபறி ஏற்பட்டது. உரிய காணியை அடையாளப்படுத்தி வழங்காவிடின், திட்டம் வேறு மாகாணத்திற்கு மாற்றப்படும் என்று கிராமிய பொருளாதார அமைச்சு மிரட்டி வந்தது. இதனால் வவுனியாவில் இருந்து முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து வடக்கு மாகாண சபையில் இது விவாதிக்கப்பட்டது. நீண்ட விவாதத்தின் பின்னர், தாண்டிக்குளம் காணியை இந்தத் திட்டத்துக்கு வழங்க வடக்கு மாகாணசபை தீர்மானம் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தினால், வவுனியா மாவட்ட அரச அதிபர், கிராமிய பொருளாதார அமைச்சு என்பவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கமைய தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை நிறுவுவதற்கான பூர்வாங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. முதற்கட்டமாக தாண்டிக்குள காணி நில அளவைத் திணைக்களத்தினரால் அளவீடு செய்யப்பட்டது.

இத்தகைய பின்னணியில் நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இது தொடர்பில் திடீரெனக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தக் கடிதம் கொழும்பு அரசின் அமைச்சர் ஒருவர் ஊடாகவே பிரதமரிடம் சேர்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் தீர்மானம் தாண்டிக்குளத்தில் அமைக்கப்பட வேண்டும் என்று இருக்க, முதலமைச்சர் ஓமந்தையில் அமைக்குமாறு பிரதமரைக் கோரியுள்ளமை மீண்டும் இந்தப் பிரச்சினையைச் சர்சைக்குள்ளாக்கி உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply