ஜெனிவா செல்லமுன் பாதுகாப்பு தரப்பை சந்திக்கவுள்ள மங்கள
சர்வதேச தரப்பினால் இலங்கை இராணுவம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிக்கப்படும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் இறுதி யுத்த காலகட்டத்தில் கடமையாற்றிய இராணுவ உயரதிகாரிகள், முக்கிய உறுப்பினர்கள் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 32ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் எதிர்வரும் 29ஆம் திகதி வாய்மூல அறிக்கை வெளியிடப்படவுள்ளதுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளக விசாரணை பொறிமுறைகள் தொடர்பில் உரையாற்றவுள்ளார்.இந்நிலையில் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச தரப்பினரும் சிவில் அமைப்புகளும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன .
இதேவேளை புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்காக இலங்கை இராணுவத்தை போர்க்குற்றவாளிகளாக நிரூபிக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பிலான விவாதம் ஆரம்பிக்க முன்னர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் பாதுகாப்பு தரப்பினருடன் முக்கிய சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இறுதி யுத்த காலகட்டத்தில் கடமையாற்றிய இராணுவ உயரதிகாரிகள், முக்கிய உறுப்பினர்கள் மற்றும் முப்படைகளின் தளபதிகளையும் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் சந்திக்கவுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட முக்கிய நபர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply