இலங்கைக்கு வரும் 16 திருவள்ளுவர் சிலைகள்

THIRUVALUWARஇலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நிறுவுவதற்காக 16 திருவள்ளுவர் சிலைகளை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் இலங்கை அரசிடம் வழங்கியது என, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் தலைமையில் இயங்கி வரும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் தனது தமிழ்ப் பணிகளின் ஓர் அங்கமாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் திருவள்ளுவர் சிலைகளை நிறுவி வருகிறது.

அந்த வகையில் ரிஷிகேஷ், நவிமும்பை, அந்தமான், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலும், அமெரிக்கா, தென்னாபிரிக்கா, மலேசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் வள்ளுவர் சிலைகளை நிறுவியிருக்கிறது. இந்ததநிலையில், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான திருகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, புத்தளம், புளியங்குளம் உட்பட 16 இடங்களில் வள்ளுவர் சிலைகளை நிறுவ முடிவு செய்தது.

இதற்காக சிற்பி ஜானகிராமன் என்பவரைக் கொண்டு பைபர் கிளாஸ் பொருளால் 16 வள்ளுவர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் அறிமுக விழா சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்க நிறுவனர் வி.ஜி. சந்தோஷம், இலங்கை கல்வி அமைச்சகத்தின் செயலாளர் திசா ஹெவாவிதானா, சென்னையில் உள்ள இலங்கை துணை தூதர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் வள்ளுவர் சிலைகளை ஒப்படைத்தார்.

விழாவில் வி.ஜி.சந்தோஷம் வர வேற்றுப் பேசும்போது, “இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் வள்ளுவர் சிலைகளை நிறுவ வேண்டும் என்று இலங்கை எழுத்தாளர் மறவன்புலவு க.சச்சிதானந்தம் வேண்டுகோள் விடுத்தார்.

அவரது வேண்டுகோளை ஏற்று இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வைப்பதற்காக இந்த 16 வள்ளுவர் சிலைகளை வழங்குகிறோம். இந்த சிலைகள் செவ்வாய்க்கிழமை சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் வழியாக கொண்டு செல்லப்படும். இதைத் தொடர்ந்து இலங்கையில் நடத்தப்படும் மாநாட்டில் தமிழறிஞர்கள், ஆசிரியர்கள், துணைவேந்தர்கள், நீதிபதிகள் என 60 பேர் கலந்துகொள்கிறார்கள்” என்றார்.

இலங்கை துணை தூதர் கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, “இலங்கைக்கும், இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவில் புதிய பரிமாணம் இன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. உலகத்துக்கே சொந்தமானவர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 7 சொற்களில் கருத்துகளை ஆணித் தரமாக சொன்னவர் வள்ளுவர் என்று குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply