சோமாலியா நாட்டில் அல் ஷபாப் போராளிகள் 43 பேருக்கு மரண தண்டனை

SOMALIYAஆப்பிரிக்க நாடான சோமாலியாவில், மத அடிப்படையிலான அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று கூறி சன்னி பிரிவை சேர்ந்த அல் ஷபாப் போராளிகள் ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள். அங்கு அவர்கள் பல நகரங்கள், கிராமங்களை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து கடுமையான சட்டங்களை அமல்படுத்தி உள்ளனர். அந்த சட்ட திட்டங்களை மீறுவோருக்கு மிகக்கடுமையான தண்டனைகளை வழங்குகின்றனர்.

இந்த போராளிகளை அமெரிக்காவும், ஐ.நா.சபையும் பயங்கரவாதிகளாக அறிவித்து தடை செய்துள்ளன.

வணிக வளாகங்கள், பொது இடங்களில் அடிக்கடி தாக்குதல் நடத்தி அல் ஷபாப் போராளிகள் பேரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறார்கள். 2014-ம் ஆண்டு அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தி 10 பேரை கொன்றவர்கள், இந்த அல் ஷபாப் போராளிகள்.

அங்குள்ள புண்ட்லாண்ட் மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக அவர்கள் பாதுகாப்பு படைகளுடன் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்ட அல் ஷபாப் போராளிகள் 97 பேர் பிடிபட்டனர். அவர்கள் மீது பயங்கரவாத வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது 97 பேரில் 54 பேர் சிறார்கள் என்ற வகையில் அவர்கள் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது. மற்ற 43 பேர் தாங்கள் அல் ஷபாப் போராளிகள் என்பதை கோர்ட்டில் ஒப்புக்கொண்டனர். தங்கள் மீதான கலக குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டனர். அவர்கள்மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய கோர்ட்டு 43 பேருக்கும் மரண தண்டனை விதித்து நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாலை தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கில் சோமாலியா அரசு சார்பில் ஆஜரான வக்கீல் அப்துல்லா ஹெர்சி எல்மி கூறும்போது, “புண்ட்லாண்ட் மாகாணத்தில் கலகத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு 3 மாதங்களாக சிறைக்காவலில் இருந்து வருகின்றனர். அவர்களில் 43 போராளிகளுக்கு கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. மீதி 54 பேர் சிறுவர்கள் என்பதால் அவர்கள் சிறையில் தொடர்ந்து காவலில் வைக்கப்படுவார்கள். தண்டிக்கப்பட்டுள்ள அனைவரும் நுகால், முதுக் பகுதிகளில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த கலகங்களில் முக்கிய பங்கு வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.

தண்டிக்கப்பட்டவர்கள் தங்கள் மீதான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசமும், அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 43 பேருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்திருப்பது அல் ஷபாப் போராளிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply