ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு 52வீத வாக்கு; தோல்வியின் எதிரொலி பிரதமர் டேவிட் ​​ பதவி விலக முடிவு

camaroonஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமென அந்நாட்டு மக்கள் தீர்ப்பளித்துள்ளதால் பிரதமர் டேவிட் கெமரூனும் தனது பதவியை இராஜினாமாச் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் தொடர்ந்தும் அங்கம்வகிக்க வேண்டும் என்ற பிரதமர் டேவிட் கெமரூனின் கொள்கைக்கு எதிராகவே நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு முடிவுகள் அமைந்திருந்தன.

 

இதனால் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறவுள்ளதுடன் பிரதமர் டேவிட் கெமரூன் தனது பதவியையும் இராஜிநாமா செய்யவுள்ளதாக மிக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

 

பிரிட்டன் வழங்கும் சமூக நலத் திட்டங்கள், சலுகைகளை ஐரோப்பிய யூனியனிலுள்ள வேறு நாட்டவர்கள் அனுபவிப்பதால் பிரித்தானியர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில் பிரான்ஸ், ஜெர்மன், பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், போர்த்துக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. குரோஷியா 2013 ஆம் ஆண்டு இதில் இறுதியாகச் சேர்ந்துகொண்டது.

 

ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் வசிப்பவர்கள் அந்த அமைப்பிலுள்ள எந்தவொரு நாட்டுக்கும் சென்று வாழவும், வேலை வாய்ப்பு பெறவும், கல்வி கற்கவும் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் ஐரோப்பாக் கண்டத்திலுள்ள பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் அதிகளவில் குடியேறத் தொடங்கினர். இது மிக நீண்ட காலமாக ஐரோப்பிய யூனியனில் பிரிட்டனின் அங்கத்துவம் குறித்த பல சர்ச்சைகளை கிளப்பியது. இது குறித்து மக்களின் அபிப்பிராயத்தை கோரவே நேற்றுமுன்தினம் பிரிட்டனில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மேலும் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகினாலும் தொடர்ந்து இந்த அமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்போவதாக ஐரோப்பிய யூனியன் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் பிரிட்டன் பிரதமர் வெளியிட்ட கருத்தில்

 

பிரித்தானிய நாடு என்ற கப்பலுக்கு கேப்டனாக இனி நான் நீடிப்பது சரியாக இருக்காது. தேசத்தின் நலனிற்காக பிரதமர் பதவியிலிருந்து விலகுவது தான் சரியான முடிவு’ என பிரதமர் கமெரூன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

 

பிரித்தானிய பிரதமராக இரண்டாவது முறையாக கடந்த 2015ம் ஆண்டு மே 7ம் திகதி டேவிட் கமெரூன் தெரிவு செய்யப்பட்டார். இரண்டாவது பிரதமர் பதவிக்காலம் தொடங்கி ஒரு வருடத்திற்குள் அவர் பதவி விலகுவது குறிப்பிடத்தக்கது.

 

பிரிட்டன் விலகினாலும் 27 நாடுகளுடன் ஒரு அமைப்பாக தொடர்ந்தும் இயங்குவோம்

 

ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இருந்து விலக பிரிட்டன் மக்கள் முடிவெடுத்துள்ள நிலையில் 27 நாடுகளை கொண்ட அமைப்பாக தொடர்ந்து இயங்குவோம் என ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனால்ட் டஸ்க் பேட்டியளித்துள்ளார்.

 

ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிப்பதா? அல்லது விலகுவதா? என்பது பற்றி தீர்மானிக்க பிரிட்டனில் நேற்று (வியாழக்கிழமை) பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. பிரிட்டன் நாட்டின் குடியுரிமை பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பொதுவாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

 

இன்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டது. ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ஒரு கோடியே 61 லட்சத்து 41 ஆயிரத்து 241 (48.1 சதவீதம் ) பேரும், விலக வேண்டும் என ஒரு கோடியே 74 லட்சத்து 10 ஆயிரத்து 742 (51.9 சதவீதம் ) பேரும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். 12 லட்சத்து 69 ஆயிரத்து 501 வாக்கு வித்தியாசத்தில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது உறுதியாகி விட்டது.

 

இந்நிலையில், பெல்ஜியம் நாட்டின் தலைநகரான புருசெல்ஸ் நகரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனால்ட் டஸ்க், ‘27 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் செயல்படும் என உறுப்பு நாடுகளின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.

 

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம்தான் என்றாலும் அச்சப்படும்படியாக ஏதுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னும் ஒருவாரத்தில் இந்த அமைப்பில் இணைந்துள்ள 27 நாடுகளின் தலைவர்கள் பங்குபெறும் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.

 

அப்போது, இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசித்து, எங்கள் ஒன்றியத்தின் ஆக்கப்பூர்வமான பணிகளின்மீது அதிக கவனம் செலுத்துவோம் என்றும் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

 

வாக்கெடுப்பை நிராகரித்து புதிதாக

 

வாக்கெடுப்பை நடத்த கோரிக்கை

 

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பை நிராகரித்துவிட்டு புதிதாக வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டும் என தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.

 

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா நீடிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் சுமார் 75 சதவிகித மக்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

 

இதில், 51.9 சதவிகித மக்கள் ’வெளியேற வேண்டும்’ என்றும் 48.1 சதவிகித மக்கள் ’நீடிக்க வேண்டும்’ என்றும் வாக்களித்துள்ளனர்.

 

இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், நடந்து முடிந்த பொதுவாக்கெடுப்பு குறித்து தற்போது அரசுக்கு புதிய கோரிக்கை ஒன்று எழுந்துள்ளது.

 

அதாவது, பொதுவாக்கெடுப்பு நடைபெற்று முடிவுகள் வெளியாகும்போது, அது 60 சதவிகித்திற்கு குறைவாக இருந்தால், மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த வழிவகை செய்யும் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் ஒன்லைன் மூலமாக கையெழுத்திட்டு வருகின்றனர்.

 

இது சாத்தியமானால், தற்போது நடந்து முடிந்த பொதுவாக்கெடுப்பை நிராகரித்துவிட்டு புதிதாக வாக்கெடுப்பு நடத்தும் சூழல் உருவாகும்.

 

ஒன்லைன் மூலம் பொதுமக்கள் 10,000 கையெழுத்துக்கள் இட்டால், அதற்கு அரசு முறையான பதில் அளிக்க வேண்டும்.

 

இது 1,00,000 கையெழுத்தாக அதிகரித்து இருந்தால், பாராளுமன்ற விவாதத்தில் இந்த விவகாரம் ஆலோசிக்கப்படும்.

 

தற்போது இரண்டாவது பொதுவாக்கெடுப்பு குறித்து எழுந்துள்ள இந்த ஒன்லைன் கோரிக்கையானது 90,000 கையெழுத்துக்களை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply