இந்த ஆண்டு இறுதிக்குள் அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் இந்தியா சேர்ந்து விடும் அமெரிக்கா நம்பிக்கை

Obama அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் இந்தியா, இந்த ஆண்டு இறுதிக்குள் சேர்ந்து விடும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. அணுசக்தி வணிகத்தில் ஈடுபடவும், அணு தொழில்நுட்ப ஏற்றுமதி செய்யவும் என்.எஸ்.ஜி. என்னும் அணுசக்தி வழங்கும் நாடுகள் குழுவில் இந்தியா உறுப்பினர் ஆக வேண்டும். ஆனால் இதில் உறுப்பினராக சேருவதற்கு என்.பி.டி. என்னும் அணுஆயுத பரவல் தடை உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டும். இந்தியா இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடாத நாடு என்பதால், என்.எஸ்.ஜி.யில் சேர்ப்பதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டது.

 

அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் ஆகிய வல்லரசு நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளித்தாலும், என்.எஸ்.ஜி. அமைப்பில் உள்ள 48 நாடுகளும் ஏகோபித்த ஆதரவை வழங்கினால் மட்டுமே, உறுப்பினர் ஆக முடியும். சியோலில் கடந்த வாரம் நடந்த என்.எஸ்.ஜி. பேரவை கூட்டத்தில், இதே நிலைப்பாட்டை சீனாவும், சில நாடுகளும் வலியுறுத்தியதால் இந்தியாவின் விருப்பம் நிறைவேறாமல் கை நழுவியது.

 

மெக்சிகோ யோசனை

 

ஆனாலும் என்.எஸ்.ஜி.யில் உறுப்பினராக சேர வேண்டும் என்ற இந்தியாவின் கனவு இன்னும் முழுமையாக கையை விட்டு போய் விடவில்லை என தெரிய வந்துள்ளது.

 

மெக்சிகோ கூறியுள்ள யோசனைப்படி, அணு ஆயுதப்பரவல் தடை உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியா போன்ற நாடுகளையும் என்.எஸ்.ஜி.யில் உறுப்பினராக சேர்ப்பது பற்றி பரிசீலிக்க இந்த ஆண்டு இறுதிக்குள் என்.எஸ்.ஜி. பேரவை கூட்டப்படலாம் என ராஜ்ய வட்டாரங்கள் கூறுகின்றன.

 

ஆனால் வழக்கமாக என்.எஸ்.ஜி. பேரவை கூட்டம் அடுத்த ஆண்டுதான் நடைபெற வேண்டும்.

 

அமெரிக்கா நம்பிக்கை

 

ஆனால் மெக்சிகோவின் யோசனைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கிடையே, இந்தியாவின் விண்ணப்பம் பற்றி விவாதிப்பதற்கு அர்ஜென்டினா தூதர் ரபேல் குரோசி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக வாஷிங்டனில் ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

 

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் விண்ணப்பம் பற்றி பரிசீலிப்பதற்கு என்.எஸ்.ஜி. பேரவை கூட்டம் கூட்டப்பட வழி இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இதற்கு சில வேலைகள் செய்ய வேண்டும். இருப்பினும் இந்த ஆண்டு இறுதிக்குள் என்.எஸ்.ஜி.யில் இந்தியா முழுமையான உறுப்பினர் ஆகி விடும் என நம்புகிறோம்.

 

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply