மீனவர் விவகாரம்: அமரவீரவை அழைத்துப் பேச சுஷ்மா முடிவு

susmaஇலங்கை, இந்திய மீனவர்கள் இடையே நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழகம், புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 15 மீனவ சமுதாயப் பிரதிநிதிகளிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்தார். இதுதொடர்பாக தில்லியில் சுஷ்மா ஸ்வராஜை, மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் மீனவ சமுதாயப் பிரதிநிதிகள் புதன்கிழமை சந்தித்துப் பேசினர். இப்பிரதிநிதிகள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு சுஷ்மா ஸ்வராஜிடம் கையளிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் திருச்சி சிவா கூறுகையில்,

 

தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 103 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால், படகுக்கு தலா 25 குடும்பங்கள் வீதம் ஆயிரக்கணக்கில் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதன் விளைவாக, தொழில் ஆதாரமின்றி தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் உள்ளனர். இதுகுறித்து சுஷ்மா ஸ்வராஜிடம் மீனவ சங்கங்களின் பிரதிநிகள் விளக்கினர். மீனவர்கள் சுட்டிக்காட்டிய பிரச்னைகள், ஏற்கெனவே தனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அண்மையில் கைதான ஐந்து மீனவர்கள் உள்பட இலங்கை சிறைகளில் மொத்தம் உள்ள 29 மீனவர்களை உடனே விடுதலை செய்வது குறித்து இலங்கை அரசிடம் கொழும்பில் உள்ள இந்தியத் தூதர் மூலம் அழுத்தம் கொடுக்கப்படும் என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

 

இரண்டாம் கட்டமாக இலங்கை வசம் உள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்தும் அந்நாட்டு அரசின் மீன்வளத் துறை அமைச்சரை புதுதில்லிக்கு அழைத்துப் பேசுவதாக சுஷ்மா தெரிவித்தார்.

 

இந்திய மீனவர்கள் சங்கங்கள், கடற்படை அதிகாரிகள், காவல் அதிகாரிகள், கடலோர காவல் படை அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய கலந்தாய்வுக் கூட்டத்துக்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

 

இதைத் தொடர்ந்து, இந்திய – இலங்கை மீனவர்கள் பங்கேற்கும் நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

 

இச்சந்திப்பின் போது, “இந்திய மீனவர்களின் நலன் கருதி, இலங்கைக்கு கொடுக்கப்பட்ட கச்சத்தீவை மீட்டுத் தர வேண்டும்’ என்று தங்கள் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை மீனவர்கள் சுட்டிக்காட்டினர். எனினும், இந்த விவகாரம், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இதுகுறித்து சுஷ்மா ஸ்வராஜ் கருத்துத் தெரிவிக்கவில்லை.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply