வங்காளதேசத்தில் இன்று மேலும் ஒரு பூசாரி வெட்டிக் கொலை

murderசுமார் 16 கோடி மக்கள் வாழ்ந்துவரும் வங்காளதேசத்தில் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள்மீது சமீபகாலமாக கொலைவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் மேற்கு ஜினாய்கா மாவட்டத்தில் கோபால் கங்குலி(70) இந்து கோயில் பூசாரி ஒருவர் கழுத்தை அறுத்து துடிதுடிக்க படுகொலை செய்யப்பட்டது நினைவிருக்கலாம். அதற்கும் முன்னதாக கிறிஸ்தவ வியாபாரி ஒருவரும் படுகொலை செய்யப்பட்டார்.

பாப்னா மாவட்டம், ஹேமாயத்பூர் பகுதியில் தாக்கூர் அனுகுல் சந்திரா சத்சங்க பரம்தீர்த்த ஹேமாயத்புர்தாம் என்ற இந்து ஆசிரமம் ஒன்றுள்ளது. இந்த ஆசிரமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக தன்னார்வலராக பணியாற்றி வந்தவர் நித்யாரஞ்சன் பாண்டே(60).

கடந்த மாதம் பத்தாம் தேதி வழக்கமான நடைபயிற்சி சென்றபோது நித்யாரஞ்சன் பாண்டேவை வழிமறித்த ஒரு கும்பல் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பியோடியது.

இதற்கு முன்னர் நிகழ்ந்த இதுபோன்ற 30 படுகொலைகளில் 18 கொலைகளுக்கு இங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றிருந்தனர். கடந்த மாதம் நடைபெற்ற மூன்று படுகொலைகளுக்கு இன்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜினைதா மாவட்டத்தில் இன்று காலை மேலும் ஒரு பூசாரி கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இங்குள்ள இந்து கோயிலில் பூசாரியாக பணியாற்றிவந்த ஷைமானந்தா(45) என்பவர் இன்று அதிகாலை பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று வாலிபர்கள் அவரை வீச்சரிவாளால் துடிதுடிக்க வெட்டிக் கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த கொலை நடந்திருக்கும் விதத்தை வைத்துப் பார்க்கும்போது, இதற்கு முன்னர் நடந்த பூசாரிகள் கொலைக்கு காரணமான உள்ளூர் தீவிரவாதிகளின் கைவரிசையாகவே இந்த சம்பவத்தை பார்க்க வேண்டியுள்ளது என மாவட்ட தலைமை அதிகாரி மஹ்பூபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply