இலங்கை சிறையில் இருக்கும் 34 மீனவர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
இலங்கை சிறையில் இருக்கும் 34 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்கும் வகையில் திடமான முடிவு எடுக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.ஜெயலலிதா கடிதம்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–தமிழகத்தில் மீண்டும் ஒரு சம்பவமாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 5 பேர் பிடித்து செல்லப்பட்டுள்ளதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 5 மீனவர்களை ஜூலை 3–ந் தேதி (நேற்று) அதிகாலையில் இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று காங்கேசன்துறையில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.பாக் ஜலசந்தியை ஒட்டியுள்ள தமிழக கடலோர பகுதியை சேர்ந்த அப்பாவி மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக தங்களின் பாரம்பரிய உரிமையுள்ள கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும்போது, அப்பாவி மீனவர்களை தொடர்ச்சியாக பிடித்து செல்வது, அச்சமூட்டுவது போன்ற செயல்களில் இலங்கை ராணுவம் தொடர்ந்து ஈடுபடுவது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.நிரந்தர தீர்வு
இந்தியாவில் உள்ள தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு வெளிவிவகாரத்துறை மூலம் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து 1974 மற்றும் 1976–ம் ஆண்டுகளில் செய்துகொள்ளப்பட்ட இருநாட்டு ஒப்பந்தங்கள், இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று சுப்ரீம் கோர்ட்டில் நான் வழக்கு தொடர்ந்து உள்ளேன்.தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை நிலைநாட்டி, அவர்களது வாழ்வாதாரத்துக்கு இலங்கை கடற்படையினரால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று மத்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.திடமான முடிவு
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக திகழக்கூடிய மீன்பிடி படகுகளை விடுவிக்கக்கூடாது என்ற இலங்கை அரசின் நிலைப்பாடு, பிரச்சினையை மேலும் அதிகரிக்கும் விதமாக உள்ளது. தற்போது 95 மீன்பிடி படகுகள் இலங்கை கடற்கரையோரம் பாதுகாப்பற்ற முறையிலும், சேதமடைந்த நிலைமையிலும் உள்ளன. மேலும் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக சுதந்திரமாக மீன்பிடிக்கும் வகையில் திடமான முடிவை மத்திய அரசு உடனடியாக எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.கடந்த 3–ந் தேதியுடன் (நேற்று) பிடிபட்ட 5 மீனவர்கள் உள்பட 34 மீனவர்கள், 95 மீன்பிடி படகுகள் தற்போது இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த விவகாரத்தில் உடனடியாக நீங்கள் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்றும், மீனவர்களை விடுவிப்பதுடன் படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply