இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு லைசென்சு: இலங்கை அரசு பரிசீலனை

meenavarஇலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு ‘லைசென்சு’ வழங்குவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக அந்த நாட்டு அரசு கூறியுள்ளது.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைவதாக கூறி அந்த நாட்டு கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாவதும், கைது செய்யப்படுவதும் நடந்து வருகிறது. 

 

அதுமட்டுமின்றி அந்த நாட்டு மீனவர்களும் தமிழக மீனவர்களை தாக்கி மீன்களை பறிப்பது, படகுகள், வலைகளை சேதப்படுத்துவது போன்ற அட்டூழியங்களும் அரங்கேறி வருகின்றன. இதனால் தமிழக மீனவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

கடந்த சில ஆண்டுகளாக தொடர் கதையாகி வரும் இந்த பிரச்சினையை தீர்க்க இரு நாட்டு அரசுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மேலும் இரு நாட்டு மீனவர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. எனினும் சுமூக தீர்வு இன்னும் உருவாகவில்லை.

 

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு, இந்திய மீனவர்கள் சிலருக்கு இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கு லைசென்சு வழங்கும் முறையை அந்த நாட்டு அரசு பரிசீலித்து வருவதாக செய்தித்தாளில் செய்தி வெளியாகி உள்ளது.

 

‘குறைவான எண்ணிக்கையிலான தமிழக மீனவர்களுக்கு ‘லைசென்சு’ வழங்கும் திட்டம் குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். எனினும் இது குறித்து இறுதியான முடிவு இன்னும் எடுக்கவில்லை. இரு தரப்புக்கும் ஒரு சிக்கலான பிரச்சினை இது’ என்று இலங்கை பாதுகாப்பு செயலாளர் கருணசேனா ஹெட்டியாராச்சி தெரிவித்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

 

மேலும் இந்த திட்டத்துக்காக நுட்பமான பரிந்துரைகள் உருவாக்கப்பட்டு தூதரகம் வாயிலாக இந்திய அரசுக்கு அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

இந்திய மீனவர்களுக்கு லைசென்சு வழங்கும் திட்டம் இந்திய தரப்பிலிருந்தே கூறப்பட்டது என்று கூறியுள்ள அந்த பத்திரிகை, இதற்கு இலங்கை மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் செய்தி வெளியிட்டு உள்ளது.

 

அந்தவகையில் இந்த திட்டம் இறுதி செய்யப்பட்டால் இலங்கையில் கடும் எதிர்ப்பு கிளம்பும் என கூறப்படுகிறது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply