உடனடி யுத்த நிறுத்தமொன்றை வலியுறுத்தி பிரித்தானிய பாராளுமன்ற முற்றுகை

வன்னியில் உடனடி யுத்த நிறுத்தமொன்று ஏற்படும் வரை தொடர்ந்து வெஸ்ட்மின்ஸ்ரர் பாராளுமன்ற கட்டிடத்தின் முன்பாக காலவரையற்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுமாறு பிரித்தானியாவில் உள்ள புலிகள் ஆதரவு ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வருகின்றன. முன்னறிவித்தல் இன்றி திடீரென இன்று (ஏப். 6) காலை காலவரையற்ற பாராளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தமை புலிகள் தமது இராணுவ தோல்வியை சற்றுப் பின்போட முனையும் கடைசி முயற்சியும் பயனற்று போகப்போவதையே முன்மொழிந்து நிற்பதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இலண்டன் நேரம் பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பித்த இப்போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதில் கலந்து கொண்ட சிலர் திடீரென வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கிழமை ஆரம்ப நாளில் வழமையாக காணப்படும் வாகன நெரிசல் மேலும் அதிகரித்து பாராளுமன்ற பிரதேசத்தில் வீதிப்போக்குவரத்து மோசமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை தாம் இன்று இரவு தொடரப்போவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது ஆதரவு ஊடகங்களில் அறிவித்துள்ளனர். எனினும் பிரித்தானிய காவற்துறையினரால் இன்று மாலை 6 மணி வரையே இவ்வார்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் பின்னர் அவர்கள் கலைந்து போக மறுப்பின், பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிடுமென எச்சரிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply