முன்னாள் போராளிகளான தம்பதியினர் கைது
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவநகர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளான தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று இரவு 7.30 அளவில் இடம்பெற்றுள்ளது.பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசாரினால் இவர்கள் இருவரும் கைதுசெய்து அழைத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்தக் கைது தொடர்பில் ஒட்டுசுட்டான் மற்றும் வவுனியா பொலிஸ் நிலையங்களை தொடர்புகொண்டு கேட்டபோதும், தமக்கு எதுவும் தெரியாது என கூறிய பொலிசார், தமக்கும் இந்தக் கைதுக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்துவிட்டனர்.
எனினும் முன்னாள் போராளிகளான தம்பதியினரை கைதுசெய்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தடுத்துவைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தியதை ஒட்டுசுட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உறுதிப்படுத்தினார்.
முன்னாள் போராளியான கேதீஸ்வரன் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும், சாவித்திரி என்ற அவரது மனைவி வட்டக்கச்சியைச் சேர்ந்தவர் என்றும், இவர்கள் இருவரும் ஒட்டுசுட்டான் சிவநகர் பகுதியில் வசித்து வந்த நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கேதீஸ்வரனை ஒட்டுசுட்டான் நகர் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ள அதேவேளை மனைவியை வீட்டில் வைத்து கைதுசெய்துள்ளதாக அயலவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கைதுக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை. எனினும் முன்னாள் போராளி கேதீஸ்வரனின் கையடக்கத் தொலைபேசியில் சர்ச்சைக்குறிய காணொளி இருந்ததாலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் கேதீஸ்வரன் தான் ஒரு விடுதலைப் புலி உறுப்பினர் என்று கூறி தொலைபேசியில் அச்சுறுத்தியதாலேயே அவரை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது. எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்காக கேதீஸ்வரனை கைதுசெய்திருந்தாலும், எதற்காக அவரது மனைவி சாவித்திரியை கைதுசெய்தனர் என்ற கேள்வியை மக்கள் எழுப்பியுள்ளனர்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply