வடகொரியா மீண்டும் நீர்மூழ்கி ஏவுகணையை பரிசோதித்ததாக தென்கொரியா குற்றச்சாட்டு

north koreaகிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.வடகிழக்கு ஆசிய நாடுகளான தென்கொரியாவும், வடகொரியாவும் தங்களது ஆயுத பலத்தை நிலைநாட்ட பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை வடகொரியா அவ்வப்போது பரிசோதித்து வருகிறது.

அந்த நாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு இதுவரை 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன.

இதன்காரணமாக அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.

அவ்வகையில், வடகொரியா இன்று கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து சக்திவாய்ந்த ஏவுகணையை பரிசோதித்ததாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது. அந்த ஏவுகணை எவ்வளவு தூரம் பறந்தது? எங்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை தாக்கியது? என்ற தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

வடகொரியாவின் தொடர் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் கவன்களை (பொறி) நிலைநிறுத்த அமெரிக்காவும் தென்கொரியாவும் சமீபத்தில் தீர்மானித்தன. இந்நிலையில், வடகொரியா இன்று நடத்தியுள்ள இந்த ஏவுகணை சோதனை அமெரிக்காவுக்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கத் தோன்றுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply