தமிழக மீனவர்களை 75 நிமிடங்கள் கூட அனுமதிக்க முடியாது

mahinda-amaraveera-719x480_13072016_kaa_cmyதமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடிப்பதற்கு 75 நாட்கள் அல்ல, 75 நிமிடங்கள் கூட அனுமதி வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக இல்லையென கடற்றொழில், நீரியல்வள அபிவிருத்திஅமைச்சர் மஹிந்த அமரவீர திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இலங்கை கடற் பரப்புக்குள் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதற்கு எக்காரணம் கொண்டும் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க தயாராக இல்லையெனவும், சிலர் வருடத்தில் 75 நாட்கள் இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடிப்பதற்கு தமிழக மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுமென கூறிவரும் கதைகள் முற்றிலும் பொய்யானது, வதந்தி எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளை சுட்டிகாட்டி வட மாகாண மீனவர்கள் நேற்றுமுன்தினம் வட மாகாண சபைக்கு முன்பாக பாரிய ஆர்பாட்டமொன்றை நடத்தினர். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

அமைச்சர் தொடர்ந்து தெரிவிக்ைகயில்,

 

முப்பது வருடகாலமாக நாட்டில் நடைபெற்ற யுத்தத்தினால் அதிகளவான இழப்புக்களை வடபகுதிமீனவர்கள் சந்தித்திருந்தனர்.

 

பெரும்பாலான வடபகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாது தமது மீன்பிடி நடவடிக்கைகளை கைவிட்டனர். இக்காலப்பகுதியில் தமிழக மீனவர்களே இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்தார்கள். இதனால் அன்றும் எமது மீன் வளம் சூறையாடப்பட்டது.

 

தற்போதும் தமிழக மீனவர்கள் எமது கடற் எல்லைக்குள் தங்களுடைய மீன்பிடிவள்ளங்கள், இழுவை படகுகள், வலைகள் போன்ற உபகரணங்களுடன் அத்துமீறி நுழைந்து மீன் வளத்தை சூறையாடுகிறார்கள். எனவே இலங்கை கடற்படையினரும், கரையோர பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து அவர்களை கைதுசெய்வதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.

 

எனவே அத்துமீறி இலங்கை கடற் எல்லைக்குள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் ,அவர்களின் மீன்பிடி உபகரணங்களுடன் கைதுச்செய்யப்படுவார்கள். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்தாலும், அவர்களுடைய மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடிவள்ளங்கள், இழுவை படகுகள், வலைகள் போன்றவை எக்காரணம் கொண்டும் இலங்கை அரசாங்கம் விடுவிக்காது.

 

பல வருடங்களாக நிலவி வரும் இலங்கை- , இந்திய மீனவப்பிரச்சினை தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் ஆலோசனைகள், வேண்டுகோள்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும், அது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த நிறுவனமான மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சினால் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை. குறைந்தபட்சம் ஒரு கலந்துரையாடல் கூட நடைபெறவில்லை. எனவே யார் எந்தவித அறிவிப்பை விடுத்தாலும் அதை மீனவர்கள் நம்ப வேண்டிய அவசியமில்லை.

 

மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சினால் எடுக்கப்படும் ஒவ்வொரு தீர்மானமும் மீனவ சங்கங்களுடன் கலந்துரையாடப்பட்ட பின்னரே எடுக்கப்படும். எனவே இது தொடர்பில் மீனவர்கள் குழப்பமடைய தேவையில்லையெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply