கஃபாவுக்கு நேராக நாளை சூரியன் உச்சம்
இந்த ஆண்டில் கடைசி தடவையாக நாளை வெள்ளிக்கிழமை முஸ்லிகளின் புனிதத் தலமான கஃபாவுக்கு மேலால் சூரியன் நேராக உச்சம் பெறவுள்ளது. சில நிமிடங்கள் கொண்ட இந்த தருணத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் திசையை சரியாக கணிக்க வாய்ப்பு ஏற்படும். சவூதி அரேபிய நேரப்படி நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 12:27 க்கு சூரியன் கஃபாவுக்கு நேராக உச்சத்தில் இருக்கும் என்று ஜித்தா வானியலாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை தொழுகைக்கான அழைப்புக்கு பின்னர் இது நிகழவுள்ளது.
அப்போது சூரிய ஒளி நேராக கஃபாவை நோக்கி இருக்கும். இதனால் கஃபாவில் இருந்து எந்த ஒரு பக்கத்திற்கு நிழல் விழாது. கடகரேகையில் இருந்து திரும்பி தெற்கு பூமத்திய ரேகை நோக்கியதாக செல்லும்போது சூரியன் அவ்வாறு தோற்றம் தரும் என்று வானியலாளர்கள் விளக்கியுள்ளனர்.
இந்த வானியல் நிலை மக்காவில் இருந்து பூகோள அடிப்படையில் தொலைதூரத்தில் இருக்கும் முஸ்லிம்களுக்கு தொழுகை நடத்தும் கிப்லா திசையை தெளிவாக அறிந்து கொள்ள உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தருணத்தில் சூரியன் நிலைகொண்டிருக்கும் திசையே 100 வீதம் சரியான கிப்லா திசையாக இருக்கும் என்று வானியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது சிறிய தடி ஒன்றை நட்டு கிப்லாவின் திசையை இலகுவாக அறிய முடியுமாக இருக்கும். அப்போது சூரியனில் இருந்து எதிர்த்திசையில் விழும் நிழலே கிப்லாவை காட்டும் திசையாக இருக்கும். இலங்கை நேரப்படி பிற்பகல் 2:57க்கும் கஃபாவுக்கு நேராக சூரியன் உச்சம் பெறவுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த மே மாதத்தில் சூரியன் கஃபாவுக்கு நேராக உச்சம் பெற்றது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டிலும் இரண்டு தடவைகள் இது நிகழும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply