துருக்கியில் ராணுவ சதிப்புரட்சி முயற்சி! ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் விமான நிலையம்
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒரே முஸ்லிம் நாடான துருக்கியில் சற்று முன்னர் ராணுவப் புரட்சியொன்று வெடித்துள்ளது.தலைநகரின் முக்கிய வீதிகள் மற்றும் பாலங்கள் மட்டுமன்றி அதாதுர்க் சர்வதேச விமான நிலையமும் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.சர்வதேச ஊடகங்கள் பலவும் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
சதிப்புரட்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள ராணுவத் தரப்பினர், நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை வென்றெடுக்கும் நோக்கில் தமது நடவடிக்கை அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே துருக்கிய பிரதமர் இல்ட்ரிம் ராணுவ சதிப்புரட்சி குறித்த தகவல்களை மறுத்துள்ளார்.
பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ரஜப் தையிப் அர்துகானின் தலைமையிலான ஆட்சி தொடர்வதாகவும், பொதுமக்களால் மட்டுமே தமது அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதனை ராணுவ சதிப்புரட்சி என்று குறிப்பிட முடியாது என்றும், ராணுவத்தின் ஒருசிலர் மேற்கொண்டுள்ள சட்டவிரோத நடவடிக்கையே இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்நடவடிக்கையுடன் தொடர்புடையவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே துருக்கிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் ராணுவத்தினரால் பணயக் கைதிகளாக சிறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் எங்கும் ராணுவத்தினர் மற்றும் தாங்கிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதுடன், ராணுவத் தலைமை மருத்துவமனை நோக்கி ஆம்புலன்ஸ்கள் விரைந்த வண்ணம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply