இடம் பெயர்ந்தோரின் தேவைகளை அரசு சிறப்பாக நிறைவேற்றுகிறது: உலக உணவுத் திட்ட பிரதிநிதி பாராட்டு

விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களை இலங்கை அரசாங்கம் சிறந்த முறையில் கண்கானித்து அவர்களது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி வருகிறது என உலக உணவுத் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அத்னான் கான் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உலக உணவுத் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அத்னான் கானுக்கும் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை நடைபெற்றது.

மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போதே உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களுக்கும் நிவாரண கிராமங்களுக்கும் நான் நேரில் சென்று அங்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகளை அவதானித்தேன். அங்குள்ள இடம்பெயர்ந்தோரின் அத்தியவசியத் தேவைகள் அரசாங்கத்தினால் உரிய முறையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இது பாராட்டத்தக்க விடயமாகும் எனக் குறிப்பிட்டார்.

வவுனியாவில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் செய்துகொடுத்துள்ள வசதிகள் குறித்து இச்சந்திப்பின்போது அமைச்சர் றிஷாத் பதியுதீன் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிக்கு விளக்கிக் கூறினார்.
இடம்பெயர்ந்துள்ள மக்களின் அத்தியவசியத் தேவையான உணவு விடயத்தில் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. இந்நிலையில் உலக உணவுத் திட்டத்தின் உதவியும் எமக்கு கிடைத்து வருவது அம்மக்களின் எதிர்பார்ப்புக்களைத் துரிதமாக நிறைவேற்றிக் கொடுப்பதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் அமைச்சர் றிஷாத், உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதியிடம் தெரிவித்தார்.
வடக்கில் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு உலக உணவுத்திட்டம் செய்து வரும் பேருதவிகளுக்காக அத்னான் கானுக்கு அமைச்சர் தமது பாராட்டைத் தெரிவித்தார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply