இன்றைய பொறுப்புள்ள அரசியல் பணிகள்
விடுதலை தொடர்பான எல்லா அரசியல் நம்பிக்கைகளும் இழந்துபோன நிலையில், தங்களை நிம்மதியாக தங்கள் ஊர்களில், தங்கள் வீடுகளில், தங்கள் குழந்தை குட்டிகளுடன் வாழ விடுங்கள் என்கின்ற நிலைக்கு சாதாரண தமிழ் மக்கள் இன்று தள்ளப்பட்டுள்ளனர். தமிழ் மக்களின் தேசியம், சுய நிர்ணயம், ஆண்ட உரிமை என்று ஆக்ரோஸமாக செயல்பட்ட தமிழ் அரசியல் சமூகமும்கூட இன்று தடுமாறி சிதைந்து பலகூறுகளாக சிதறிக்கிடக்கின்றது.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இன்று என்னதான் தீர்வு என்பதில் அவர்களுக்கிடையே ஒத்த கருத்து இல்லாத நிலைமை காணப்படுகின்றது. இன்னும் சொல்லப்போனால் ஒத்த கருத்துக்கு வர முடியாத நிலைமை சகலருக்குள்ளும் உருவாக்கப்பட்டுள்ளது என்றே கூறவேண்டும். தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகள். மற்றும் அமைப்புக்களிடையேயும் பரஸ்பர முரண்பாடுகள், சந்தேகங்கள் அதையும் மீறிய குத்து வெட்டுக்களும் மோதல்களும் நிறைந்து கிடக்கின்றன. அவை தொடர்ந்தும் நிகழ்ந்த வண்ணமுள்ளன.
தமிழ் சமூகத்தின் இன்றைய இந்த ஒருமுகப்படாத நிலைமைக்கு காரணமாக சிங்கள் அரசாங்கத்தையோ, இந்திய அரசாங்கத்தையோ வெளி நாட்டு சக்திகளையோ குறைகூறித் தப்பிக்கொள்ள முயலுதல் போன்ற அபத்தம் வேறெதுவும் இருக்க முடியாது. எமது சமூகத்தின் இந்த அவல நிலைக்குப் பிரதானமான காரணம் தொலை நோக்கற்ற அதையும் மீறி பொறுப்பற்ற தமிழ் அரசியல் தலைமைகளின் கடந்தகால செயற்பாடு என்றால் தவறல்ல. அதிலும் அன்றைய தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி வழிவந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளே என்றால் அதில் தவறில்லை. இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போலே தமிழ் சமூகத்தின் ஏக பிரதிநிதிததுவப் பாத்திரத்தை சூடிக்கொண்ட புலிகளின் அனைத்து நடவடிக்கைகளும் அமைந்தன என்றால் அது மிகையாகாது.
பின்நோக்கிப் பார்த்தால்
இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டம் ஒரு மக்கள் போராட்டமாக மலரும் என்று கனவுகண்ட நாள் ஒன்று இருந்தது. ஆனால் தடி எடுத்தவனெல்லாம் தண்டல் காரன் என்ற தொனியில் ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்கள் என்று செயற்பட ஆரம்பித்தனவோ அன்றே மக்கள் போராட்ம் பற்றி பல அடிப்படைக் கேள்விகள் எழுந்தன. அதிலும் விடுதலைப் புலிகள் என்னும் இயக்கம் பெரிய தடியை எடுத்து அதன் கை ஓங்கியவுடனேயே மக்கள் போராட்டம் என்னும் கனவு சகலருக்கும் கானல் நீரானது எனலாம். தமிழ் மக்களின் கைகளில் இருந்த தார்மீக ரீதியானதொரு போராட்டமானது ஒரு அரசியல் காடையர் கும்பலினால் கையகப்படுத்தப்பட்டு, மக்கள் போராட்டம் என்னும் அந்த அற்புதக் கனவு குற்றுயிராக குழிதோண்டிப் புதைக்கப்பட்டதே தமிழ் அரசியலின் இன்றுவரையான வேதனைக்குரிய வராலாறு.
தமிழ் சமூகத்தினுள் அன்று கனன்றுகொண்டிருந்த சாதிய ஒடுக்கு முறைக்கெதிரான போராட்டம் மற்றும் வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தையும் மிதித்து நொருக்கியபடியே அன்றைய தமிழர் தேசிய உரிமைப் போராட்டமானது ஒருவித தமிழ் வெறியுடன் தூண்டிவிடப்பட்டது. தமிழரசுக் கட்சியன் தலைமையில் அது அகிம்சைப் வழிப்போராட்டம் என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டாலும் அது தமிழ் மக்கள் சகல தரப்பினரையும் உள்ளடக்கியதான மக்கள் போராட்டமாக மலரமுடியாத வகையிலான ஆதிக்க வெறியும் வன்முறையும் அதனுள் கலந்திருந்தன என்பதே உண்மையாகும். இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் ஊதி வளாத்த இனவாத அரசியல் நெருப்புக்கு எண்ணெய் வார்க்கும் அரசியலாகவே தமிழ் காங்கிரசினதும் தமிழரசுக் கட்சியினதும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் அரசியல் செயற்பாடுகளும் வழிகாட்டல்களும் அமைந்திருந்தன.
தமிழ் தேசிய வெறியுடன் கூடியதான தொலை நோக்கற்ற இலங்கைத் தமிழ் மக்கள் சமூகத்தின் சகல பிரிவினரதும் நலன்களை உள்ளடக்காத தமிழ் தலைமைகளின் வழிகாட்டலிலேயே துரோகி ஒழிப்பு அரசியலின் அகரம் தமிழ் அரசியலில் எழுதப்பட்டது. அதன் மொத்த விளைபலனாகவும் அந்த குறுகிய அரசியல் அசிங்கத்தின் மொத்த வடிவமாகவுமே தமிழ் பாசிச அரசியலானது விடுதலைப் புலிகள் என்னும் பெயரில் தமிழ் சமூகத்தில் கட்டியெழுப்பப்பட்டு முழமையாக அதனை கையகப் படுத்திக்கொண்டது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
தமிழ் மக்களின் பெரும்பாலனவர்களின் பங்குபற்றலுடன் நடத்தப்பட வேண்டிய ஒரு போராட்டம் வெறும் ஒரு ஆயுதக் கும்பலின் குத்தகைச் செய்றபாடாக மாற்றப்பட்டது. மக்களின் கருத்துக்கள், மாற்றுச் சிந்தனைகள் எல்லாவற்றுக்குமான வழிகள் அனைத்தும் பலாத்காரமாக அடைக்கப்பட்டு மொத்த சமூகமுமே அந்தக் கும்பலின் காலடியில் கிடக்கும் கொத்தடிமைகள் போலாக்கப்பட்டது. பெரும் நிலாச்சுவாந்தார்களும் நிலப்பிரபுக்களும் தமக்கு குடிமைத் தொழில் செய்பவர்களை எப்படியும் நடத்தலாம் என்பது போலவே போராட்டத்தின் உச்சகடட்ததில் தமிழ் மக்களின் நிலை இருந்தது. அந்த நிலைமைiயே தமிழர் தலைமை ஏக பிரதிநிதித்துவமும் அதற்கு தலையாட்டும் தமிழர் சமூகமும் என அலங்காரமாக இன்று அழைக்கப்படுகின்றது.
இலங்கை மற்றும் இந்து சமுத்திர பிராந்திய அரசியல் தட்ப வெட்ப சூழ்நிலை, மற்றும் இலங்கையின் பெரும்பான்மை சிங்கள சமூகத்தினரின் ஆதரவு என்பவற்றை கணக்கில் எடுத்து நகர்த்தப்பட்டிருக்க வேண்டியதே தமிழர்களின் போராட்டமாகும். ஆனால் அதுவோ தமிழ் சமூகத்திற்கு சாதகமான சகல அம்சங்களையும் அதற்க்கு பாதகமாக்கிய படியே தமிழ் தேசிய வெறி என்னும் அரசியலால் முன்னகர்திச் செல்ல கட்டாயப்படுத்தப்பட்டது. ஒரு போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் அந்தச் சமூகமானது தன்னகத்தே கொண்டுள்ள பல்வேறு முரண்பாடுகளை மறந்து பலவீனங்களை களைந்து முற்போக்கான அம்சங்களின் சேர்ப்பில் ஒன்றுபட்டு பலமடைந்து முன்னகர்தப்படுவதற்குப் பதிலாக தமிழ் சமூகமே சிதைத்து சின்னாபின்னப் படுத்தப்படக்கூடிய அழிவு அரசியலை முன்னெடுத்துச் சென்றதே வரலாறு. 30 வருடங்களுக்க முன்னர் இருந்ததை விட பலவீனமான நிலைமையை நோக்கியே அச்சமூகம் இன்றுவரை இட்டுச் செல்லப்பட்டுள்ளது.
இந்த தவறான வழி நடத்தலின் உச்ச கட்ட நிiலைமையே இன்று தமிழ் சமூகமும் அதன் அரசியலும் இலங்கையில் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறன. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் வரைகூட பெரும்பாலான சிங்கள மக்களிடையே தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்று முன்வைக்கப்பட்டு தீர்ககப்பட முடியும் என்ற நம்பிக்கை இருந்ததை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 1987ம் ஆண்டின் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை அவ்வப்போது கிடைத்த அரிய வாய்புக்கள் அனைத்தையும் நழுவ விட்டது மட்டுமன்றி தமிழ் சமூகத்தில் வேறு எந்த ஒரு அரசியல் சக்தியும் கூட அச்சந்தர்பங்களை தமிழ் சமூகத்துக்கு சாதகமாக பயன்படுத்துவதும் பலாத்காரமாக தடுக்கப்பட்டது. சிங்கள மக்கள் மத்தியில் ‘தமிழ் மக்கள் அரசியல் தீர்வொன்றுக்கு தயாராக இருக்கிறார்கள். தமிழர்கள் யுத்தத்தை விரும்பவில்லை’ என பிரச்சாரம் செய்த அரசியல் தலைவர்களின் முகங்களில் கரி பூசுகின்ற வகையிலேயே தமிழர் அரசியல் தலைமை தமிழ் சமூகத்தை வழி நடத்திச் சென்றது.
ஆனால் இன்று…! இந்த ஒன்றரை வருட காலத்தில் நிலைமை எப்படி தலைகீழாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதை நாம் அனைவரும் கண்கூடு காண்கின்றோம். கடந்த காலங்களில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் தொடர்பாக வெட்கப்பட்ட சிங்கள சமூகம், சமாதானத்துக்காக யுத்தம செய்யும் சந்திரிகா வேண்டாம் சமாதானப் புறாவான ரணில் வேண்டும் என வாக்களித் சிங்கள சமூகம் இன்று, புலிப் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உலகமுமே தம்மிடம் கற்றுக்கொள்ள பாடங்கள் இருக்கின்றன என நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் அளவிற்கு உலக அரங்கில் திகழுகின்றது.
இந்தியத் தலைநகர் டெல்லி முதல் அமெரிக்கத் தலை நகர் வாஷிங்டன் வரை அரசியல் தலைவர்கள், இராஜதந்திரகள் சகலரும் தமிழ் மக்களை பாதுகாருங்கள் ஆனால் பயங்கரவாதத்தை ஒடுக்குங்கள் என இலங்கை அரசாங்கத்தை முதுகில தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும் காலமிது. தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு உலகம் அங்கீகாரம் கொடுத்த காலம் மலையேறிப்போய் இன்று தமிழர் பயங்கரவாதம் மலையேற்றப்படுவதற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒத்துளைப்பு வழங்கும் காலம் வரையில் தமிழர் போராட்டமானது எமது ‘சாணக்கியமான தலைமையினால்’ ‘வெற்றிகரமாக’ வழி நடத்தப்பட்டு வந்திருக்கிறது. இன்று உலகெங்கும் நாடு நாடாக, நகரம் நகரமாக, தெருத் தெருவாக நின்று ‘ஐயோ எமக்கு நடக்கும் அநியாயத்தை கேட்க இந்த உலகில் எவருமே இல்லையா?” என்று ஒப்பாரி வைக்கும் கோமாளிக் கூட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது இந்த மாபெரும் ஆண்ட தமிழினம்.
இன்றைய அவசியம்
யுத்தத்தின் கிடுக்கிப்பிடிக்குள் பலவந்தமாக அகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் சமூகம் இன்று முகம் கொடுத்துள்ள கொடிய அவலமானது வெறும் கட்டுரைகளில், அறிக்கைகளில் எழுதியோ படித்தோ புரிந்துகொள்ளக்கூடியதல்ல. அந்த அவலத்திருந்து அவர்களை உடனடியாக மீட்பதே இன்று எமது கடமையாகின்றது. அந்த மூச்சுத் திணறல் நிலையிலிருந்து அம் மக்கள் சமூகத்திற்கு ஒரு சொற்ப அளவேனும் விடுதலை கொடுப்பதே இன்றைய அரசியல் கடமையாகவும் எம்முன் முன்நிற்கின்றது.
இதை அந்த மக்களின் வார்த்தைகளில் கூறுவதானால் “எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு நாங்களும் பிள்ளைகளும் குண்டுச் சத்தங்கள் இன்றி நிம்மதியாகத் தூங்கினோம்”. இது வன்னியில் புலிகளின் பிடியிலிருந்து உயிரைச் துச்சமாக மதித்து குண்ணடிபட்ட காயங்களுடன் தப்பி வந்து தற்போது வவுனியாவில் முள்ளுக்கம்பிகளால் சூழப்பட்ட தற்காலிக முகாமக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள ஒரு குடும்பத்தின் வாயிலிருந்து வந்த சொற்களாகும். இந்த வேதனை நிறைந்த சொற்களுக்குள் அடங்கியுள்ள அர்த்தத்தை புரிந்துகொள்ளும் அரசியல் அறிவுள்ளவர்களால் மட்டும்தான் இந்த சமூகத்திற்கு தற்காலிகமாக மூச்சுவிடும் இடைவெளியை இன்று ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
அவர்கள் முகாம் வாழ்கையை போற்றவில்லை. அரசாங்க படைகளைப் போற்றவில்லை. தமிழ் மக்களுக்கு அரசியல் விடுதலை கிடைத்து விட்டதாக கூறவில்லை. தாங்கள் இன்று என்னத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதையே அந்தச் சொற்கள் வெளிப்படுத்தியுள்ளன இந்தியா உட்பட வெளி நாடுகளில் வாழும் தமிழர்களும் அவர்களின் பிள்ளைகளும் பல வருடங்களாக நிம்மதியான அச்சமற் வாழவையும் அந்தந்த நாடுகளில் உள்ள சுதந்திரங்களையும் சுகமாக அநுபவிப்பதால் இந்த யுத்தத்தை தொடருவதற்காக உதவி, ஊக்கமளித்து கொடி பிடிக்கலாம். இந்த யுத்த சூழல் தொடருவதற்கான அரசியலுக்கு அதரவழித்து ஆர்பரிக்கலாம். ஆனால் இன்று அந்த மக்களின் நலனில் அக்கறையுள்ள எவரும் தமது அரசியல் நடவடிக்கை பற்றி மீள் பரிசீலனை செய்தல் வேண்டும்.
‘தமிழ் மக்களின் உரிமைகள், இலங்கையில் அவர்களின் அரசியல் அந்தஸ்து என்பன தொடர்பாக அரசாங்கத்துடன் பேரம் பேசப்படவேண்டும் அதில் விட்டுக் கொடுப்புகளுக்கு இடமில்லை’ என்பதை மட்டும் முன்னிறுத்தி போர் முழக்கம் செய்வது இன்றைய சூழ்நிலையில் அர்த்தமமற்ற தொன்றாக ஆகியிருக்கிறது. அந்த முழக்கத்தின் பின்னால் அணிதிரள முடியாத நிலைக்கு எமது சமூகம் நலிவடைந்து போயுள்ளது. தனக்கு என்ன நிகழந்தது, ஏன் அவ்வாறு நிகழந்தது, அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என தன் சுய சிந்தனையுடன் அந்தச் சமூகம் எழுந்து நின்று சிந்திப்பதற்கு அவசியமான சுமுக நிலையென்னும் பிரணவாயுவை அது சுவாசிப்பதற்கான கால அவகாசத்தை ஏற்படுத்துவதற்காக செயற்படுவதே இன்றைய தேவை என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.
அந்த சூழலை உருவாக்குவதற்கான திசையில் நிலைமைகளை நகர்த்துவதற்கு வாய்ப்பாக உடனடி வேலைத் திட்டங்கள். இடைக்கால வேலைத் திட்டங்கள். நீண்டகால வேலைத்திட்டங்கள் என மூன்று கட்டங்களாக பணிகளை நகர்த்துவதற்கு வகை செய்தலே இன்றைய பொறுப்புள்ள அரசியல் பணியாக இருத்தல் வேண்டும்.
உடனடி வேலைத்திட்டமாக தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் அவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்துதல் யுத்த மோதல் அற்ற சூழலொன்றுக்குள் அவர்களை வாழ வைத்தல். அடுத்த கட்டமாக கடந்த முப்பது வருட யுத்த சூழலால் சிதைந்து போயுள்ள பொருளாதார வாழ்வையும் அச்சமூகத்தின் அக ஜனநாயக கட்டுமானங்களையும் கட்டியெழுப்புதல். இந்த இரண்டு கட்ட வேலைத்திட்டங்களுக்கு சமாந்தரமாக முன்றாம் கட்டமான நிரந்தர தீர்வுக்கான முயற்சியாக அரசியல் அதிகாரப் பரவலாக்கத்துடனான யாப்பு மாற்றம் கொண்டுவரப்படுவதற்கான பணிகள் நகர்த்தப்படல் வேண்டும். இலங்கையில் அரசியல் யாப்பில் மாற்றம் கொண்டு வரப்படுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைவாக்குகள் அவசியம் என்னும் தடைக்கல் இருப்பதனால் அந்தச் சிக்கல் அவிழ்க்கப்படும் வரை 13ம் திருத்தச் சட்டத்திற்கமைவாக மாகாண சபை அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படுவது அமுல்படுத்தப்படல் அவசியமாகின்றது. இந்தத் திசையை நோக்கி அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கான அழுத்தங்களையும் ஆதரவையும் வழங்குவதே இன்றைய நிலையில் பொறுப்புள்ள தமிழ் அரசியல் தலைமைகள் செய்ய வேண்டியதாகும்.
-எஸ். மனோரஞ்சன்
www.uthayam.net
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply