ஸ்ரீல.சு.கவுக்கு 40 புதிய அமைப்பாளர்கள் நியமனம்
மஹிந்த ஆதரவு அணியிலுள்ள பிரபலங்கள் பலர் அதிரடியாக நீக்கப்பட்டு சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் 41 பேர் நேற்று(17) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நீக்கப்பட்டவர்களில் ரோஹித அபேகுணவர்தன, கெஹலிய ரம்புக்வெல்ல, காமினி லொக்குகே, மஹிந்த யாப்பா அபேவர்த்தன, சீ. பீ. ரத்னாயக்க, ஜகத் பாலசூரிய, பவித்ரா வன்னியாரச்சி, சரத்குமார குணரத்ன மற்றும் உதித லொக்குபண்டார, ஏ. எம். புத்ததாஸ, உபேக்சா சொர்ணமாலி ஆகியோர் அடங்குகின்றனர்.
இதன்படி புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களாக 41 பேர் நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து நியமனம் பெற்றனர்.கட்சி நடவடிக்கைகளைப்பலப்படுத்தும் வகையிலே புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டதாக கட்சி பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.நீக்கப்பட்ட அமைப்பாளர்கள் கடந்த காலத்தில் கட்சி நலனுக்காக எதையும் செய்யவில்லை எனவும் கட்சிக்கு எதிராகவே இவர்கள் செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கெஸ்பாவ அமைப்பாளர் பதவியில் இருந்து ஐ. ம. சு. மு. பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே நீக்கப்பட்டு முன்னாள் எம்.பி. சந்தன கத்திரியாரச்சி நியமிக்கப்பட்டுள்ளார். மீரிகம இணை அமைப்பாளர்களாக இருந்த கோகிலா குணவர்தன, சஞ்சய சிரிவர்தன ஆகியோரில் கோகிலா நீக்கப்பட்டு சஞ்சய சிரிவர்தன மாத்திரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீர் கொழும்பு அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் சரத் குமார குணரத்ன அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதோடு டபிள்யு. பீ. லலித் டென்சில் அவ்விடத்துக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். திவுலபிடிய அமைப்பாளரான முன்னாள் எம்.பி. உபேக்ஷா சொர்ணமாலி நீக்கப்பட்டு சந்தன ஜெயகொடியை மாத்திரம் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன நீக்கப்பட்டு அவருடன் இணை அமைப்பாளராக செயற்பட்ட சுமித்லால் மெண்டிஸ் மாத்திரம் நியமனம் பெற்றுள்ளார்.
வெற்றிடமாக உள்ள பேருவளை அமைப்பாளர் பதவிக்கு எம். எச். எம். அம்ஜாத்தை நியமிக்க சு. க. நடவடிக்கை எடுத்துள்ளது.
வெலிகம அமைப்பாளராக இருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்த யாப்பாவுக்கு பதிலாக முன்னாள் பிரதி அமைச்சர் ஹேமாஸ் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெலியத்தை அமைப்பாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்ட நிலையில் அந்த இடத்துக்கு எராஜ் ரவீந்ர பெர்ணாந்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குண்டசாலை அமைப்பாளர் பதவியில் இருந்த முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீக்கப்பட்டு சுசில் கித்சிரி நியமிக்கப்பட்டுள்ளார்.
வலப்பனை அமைப்பாளராக ஜகத் குமார அமரதுங்க நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னர் மஹிந்த அணியை சேர்ந்த சீ. பி. ரத்னாயக்க வலப்பனைக்கு அமைப்பாளராக பணிபுரிந்திருந்தார்.
எஹலியகொட அமைப்பாளர் பதவியை முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இழந்துள்ளதோடு சரத் சந்தனாயக்க அந்த இடத்துக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் ஜகத் பாலிசூரியவின் இடத்துக்கு ஆனந்த மில்லன்கொட நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊவா பரணகம அமைப்பாளராக டீ. எம். பீ. ஏ. தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதால் ஏ. எம். புத்ததாஸ அமைப்பாளர் பதவியை இழந்துள்ளார்.
முன்னாள் எம்.பியான உதித லொகுபண்டார ஹப்புத்தலை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு சுமித் சமயதாஸ நியமிக்கப்பட்டுள்ளார். வவுனியா அமைப்பாளராகியிருந்த பிரதி அமைச்சர் பீ. சுமதிபால நீக்கப்பட்டு வவுனியா சிங்கள பிரதேச அமைப்பாளராக மாத்திரம் அவர் நியமிக்கப்பட்டதுடன் ஏனைய பிரதேசங்களுக்கான அமைப்பாளராக காதர் மஸ்தான் எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தவிர மாவட்ட அமைப்பாளர்களாக 24 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்ட அமைப்பாளர்களாக ஹுஸைன் மன்சில் (முன்னாள் மாநகர சபை உறுப்பினர்) சட்டத்தரணி ரஜித கொடிதுவக்கு (முன்னாள் மாநகர சபை உறுப்பினர்) அநுர அதுகோரள (முன்னாள் நகர சபை உப தலைவர்) விதுர பாலசூரிய ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக சு. க. தலைமையகம் கூறியது.
கம்பஹா மாவட்ட அமைப்பாளர்களாக லலித் வனிகரத்ன (மேல் மாகாண அமைச்சர் அஜித் பஸ்நாயக்க (முன்னாள் பிரதி நகர பிதா) ஆகியோரும் களுத்துறை மாவட்ட அமைப்பாளர்களாக சுமிதா பியங்கனி அபேதீர ஹசித குணவர்தன ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறை மாவட்ட அமைப்பாளராக ராஜி சந்தரலாலும், ஹம்பாந்தோட்டை மாவட்ட அமைப்பாளராக எம். டபிள்யூ. குணசேன (தென் மாகாண சபை அமைச்சர்)வும் கண்டி மாவட்ட அமைப்பாளராக பந்துல செனவிரத்னவும் (முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்) புத்தளம் மாவட்ட அமைப்பாளராக இந்ராணி தசனாயக்கவும் அநுராதபுரம் மாவட்ட அமைப்பாளராக சட்டத்தரணி பிரேமசிறி ஹெட்டியாரச்சியும் வவுனியா மாவட்ட அமைப்பாளராக சமிந்த வாசலவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சு. க. தெரிவித்தது.
இது தவிர நுவரெலியா மாவட்ட அமைப்பாளர்களாக நீலா யாப்பா, டாக்டர் ஜயந்த தர்மப்பிரிய, ஈபட்ர் பெரேரா, ரொசான் குணவர்தன ஆகியோரும் கேகாலை மாவட்ட அமைப்பாளர்களாக எஸ். ரவிகுமார், அதுல ரத்னாயக்க, பாரூக் அப்துல் லதீப் ஆகியோரையும் நியமித்துள்ளதாக சு. க. தெரிவித்தது.இந்த நிகழ்வில்சு.க செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க,அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்னரும் மஹிந்த ஆதரவு அணியிலுள்ள எம்.பி.கள் அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டது தெரிந்ததே.
மஹிந்த ஆதரவு அணியை இணைப்பதற்காக சு. க. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தநிலையில் சகல முயற்சிகளும் தோல்வியடைந்ததால் இவ்வாறு அதிரடியாக மஹிந்த ஆதரவு அணி பிரபலங்கள் பலர் சு.க.விலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்களால் கட்சி மேலும் பிளவுபடும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply