துருக்கி சிறைகளில் இருந்து 38 ஆயிரம் பேர் விடுதலை
துருக்கி நாட்டில் கடந்த மாதம் 15-ந் தேதி ராணுவத்தில் ஒரு பிரிவினர் புரட்சிக்கு முயற்சித்தனர். ஆனால் அந்த புரட்சியை அதிபர் எர்டோகன், மக்கள் துணையுடன் முறியடித்தார்.அதைத் தொடர்ந்து புரட்சிக்கு முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் 35 ஆயிரம் பேரை விசாரணைக்காக அந்த நாட்டு அரசு கைது செய்தது. இதன் காரணமாக துருக்கி சிறைகளில் கடுமையான இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த இட நெருக்கடியை குறைக்க துருக்கி அரசு அதிரடியாக முடிவு எடுத்துள்ளது.
அந்த வகையில் நன்னடத்தையுடன் நடந்து கொண்டவர்கள், இன்னும் இரண்டு அல்லது அதற்கு குறைவான வருடங்கள் சிறைவாசம் அனுபவிக்க இருந்தவர்கள் என மொத்தம் 38 ஆயிரம் பேரை நிபந்தனையுடன் விடுவிக்க துருக்கி அரசு நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
அதே நேரத்தில் கொலை, உள்நாட்டு கலகம், பாலியல் குற்றங்கள், அரசுக்கு எதிரான குற்றங்களை புரிந்தவர்கள் விடுதலை செய்யப்படமாட்டார்கள்.
இந்த தகவல்களை துருக்கி நீதித்துறை மந்திரி பெக்கிர் போஜ்டாக் உறுதி செய்து, ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “38 ஆயிரம் பேரை சிறைகளில் இருந்து விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படவில்லை, பொது மன்னிப்பும் அளிக்கப்படவில்லை, நிபந்தனையின் பேரில்தான் விடுதலை செய்யப்படுகிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார். ஆனால் நிபந்தனை என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply