104 விடுதலைப்புலிகள் விஷ ஊசி போட்டுக் கொலை: இலங்கை அரசு மீது குற்றச்சாட்டு

vikiஇலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது நடந்த போர்க்குற்றங்கள் பற்றியும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் சர்வதேச அளவிலான விசாரணை நடைபெற வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இலங்கை அரசு அதை ஏற்க மறுக்கிறது.போர் முடிவுக்கு வந்த பின்னர் ஏராளமான தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அப்படி தங்க வைக்கப்பட்டவர்களில், முன்பு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களும் அடங்குவார்கள்.

மறுவாழ்வு முகாம்களில் இருந்த விடுதலைப்புலிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டதாகவும், அப்படி விஷஊசி போடப்பட்டவர்களில் 104 பேர் மரணம் அடைந்ததாகவும், மற்றவர்கள் உடல் நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் குற்றம்சாட்டி உள்ளனர். இதுபற்றிய தகவல் அங்குள்ள ஊடகங்களிலும் வெளியாகி இருக்கிறது.

இதுபற்றி கருத்து தெரிவித்த இலங்கை வடக்கு மாகாண முதல்–மந்திரி விக்னேஸ்வரன், இலங்கை அரசின் மறுவாழ்வு முகாம்கள் அல்லது காவலில் வைக்கப்பட்டு இருந்த முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டதால் அவர்கள் நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றும், எனவே தற்போது இலங்கையின் வடக்கு பகுதியில் முகாமிட்டு இருக்கும் அமெரிக்க விமானப்படையின் மருத்துவ குழுவினர் அவர்களுடைய உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

ஆனால், விடுதலைப்புலிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை ராணுவ மந்திரி ருவன் விஜேவர்த்தனே மறுத்து உள்ளார்.

இலங்கையின் வட பகுதியில் வசிக்கும் மக்களின் (தமிழர்கள்) பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ள நிலையில், அங்குள்ள அரசியல்வாதிகள் சிலர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுவது வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசின் அனுமதி பெற்று, சர்வதேச சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் மறுவாழ்வு முகாம்களுக்கு சென்று அங்கு என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம் என்றும் அப்போது அவர் கூறினார்.

இதேபோல் இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளரும், சுகாதார மந்திரியுமான ரஜிதா சேனரத்னேவும் விஷ ஊசி குற்றச்சாட்டை மறுத்து இருக்கிறார். மறுவாழ்வு முகாம்களில் இருப்பவர்களின் உடல்நிலையை பரிசோதிக்குமாறு டாக்டர்களை கேட்டுக்கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply