மோசடிக்காரர்கள் புதிய கட்சி தொடங்கினால் இரகசியங்களை அம்பலப்படுத்துவேன்
நாட்டை கொள்ளையடித்து மோசடி செய்தவர்களுக்கு மீண்டும் ஆட்சிக்கு வர ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இவர்கள் புதிய கட்சி உருவாக்கினால் இதுவரை ரகசியமாக பேணிவந்த பல ரகசியங்களை அம்பலப்படுத்தி வீதி வீதியாக சுற்றும் நிலையை உருவாக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார். புதிய நாடு ஒரே பயணம்’ என்ற தொனிப் பொருளில் 5 வருட பயணத்தின் முதலாவது வருட நிறைவு விழா நேற்று மாத்தறை சனத் ஜெயசூரிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கடந்த ஆட்சியில் மோசடி செய்தவர்களுக்கு தண்டனை வழங்கும் அதேவேளை இந்த அரசாங்கத்தில் மோசடி, லஞ்சம் என்பவற்றுக்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அவ்வாறு யாராவது தவறு செய்தால் கூடுதல் தண்டனை வழங்குவதாகவும் அவர் எச்சரித்தார்.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டத்தில் உள்ள பாதகமான விடயங்களை தானும் பிரதமரும் இணைந்து நீக்கியதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அதிலுள்ள விடயங்களை செயற்படுத்த பாராளுமன்றத்தினூடாக ஒழுங்கு விதிகள் கொண்டு வர புதிய சரத்தொன்றை அதில் இணைத்ததாகவும் கூறினார்.
சர்வதேச சக்திகளுக்கு தேவையானவாறு நாட்டை ஆளப் போவதில்லை. என்று கூறிய அவர் சர்வதேச சக்திகளுக்கு தலைசாய்க்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
எம்மை தேசத்துரோகிகள் காட்டிக் கொடுப்போர் என்று குற்றஞ் சுமத்தியவர்கள் முடிந்தால் மாற்று தீர்வு யோசனையை முன்வைக்குமாறும் ஜனாதிபதி சவால் விட்டார்.
சர்வதேச பிரச்சினைகளில் இருந்து நாட்டை மீட்பதாகவும், ஆட்சியை கைப்பற்றும் சிலரது கனவு ஒருபோதும் நிறைவேறாத எனவும் கூறிய அவர் 2020 க்கும் பின்னரும் இணைந்து அரசாங்கம் அமைப்பது குறித்து அந்த சமயத்தில் முடிவு செய்வதாகவும் கூறினார்.
பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று ஒரு வருடம் நிறைவடைகிறது. 2015 ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று ஒரு வருடமும் 8 மாதங்களாகிறது. புதிய அரசாங்கம் என்ன செய்துள்ளது என்று கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த 1வருடத்தில் மக்களுக்கு சுதந்திரத்தை வழங்கி ஜனநாயகத்தை நிலைநாட்டி, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு வருகிறோம். உலகம் எம்மை நிராகரித்திருந்தது. ஐ. நா. முதல் சகல நாடுகளையும் இப்போது எம்மால் வெல்ல முடிந்தது.
நாட்டை சிக்கல்களில் இருந்து மீட்கவும் கைத்தொழில் நிலையங்களை கட்டி எழுப்பவும் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தவும் அடித்தளமிட்டுள்ளோம். ஜனநாயகத்தை பலப்படுத்த எமது பொறுப்பை நிறைவேற்றி வருகிறோம்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண ஐ. தே. க, சு. க. இணைந்த கூட்டரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இணக்கப்பாட்டு அரசு குறித்து நாட்டு மக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அனுபவம் கிடையாது. புதிய அரசு புதிய அனுபவத்தை வழங்கி வருகிறது. அதனால் சிலர் தவறாக விமர்சனம் செய்கின்றனர்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நிரந்தரமாக இந்த நாட்டை கட்டியெழுப்புவோம். பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது நாமல்ல. கடன் சுமை ஏற்படுத்தியதும் நாமல்ல அதனை ஏற்பாடுத்தியவர்கள் சுதந்திரமாக வீதியில் நடமாடுகின்றனர்.
மின்சார நாட்காலி என்ற வசனத்தை நானும் ரணில் விக்கிரமசிங்கவுமே நீக்கினோம். தவறியாவது 2015 ஜனவரி 8 ஆம் திகதி நான் வெற்றியீட்டியிருக்காவிட்டால் இன்று நாட்டுக்கு என்ன நடந்திருக்கும். நாட்டின் ஆட்சியை ஏற்கையில் பொருளாதார தடையிடப்பட்டு மீன்பிடி தடை, ஜீ. எஸ். பி. சலுகை நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த அரசு மீள தெரிவாகியிருந்தால் சர்வதேச நிதி நிறுவனங்கள் தூரமாகியிருக்கும் உலக பிரபல நாடுகள் எம்மிலிருந்து தூரமாகியிருக்கும் நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்டிருப்போம்.
தனிமைப்பட்டு இருந்த நாட்டை முழு உலகினதும் நற்பெயரை ஈட்ட எனதும், ரணில் விக்கிரமசிங்கவினதும் அரசாங்கத்தினாலே முடிந்தது. நாம் செய்தவை வயிற்றுக்கு பொக்கட்டுக்கு விளங்காது.
வெளிப்படையாக காண முடியாது. ஆனால் எமது அரசாங்கம் செய்த வெற்றிகளை அனைவரும் அறிவர்.
மனித உரிமை பேரவை பிரேரணையில் உள்ள காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்ட மூலத்தை கடந்த வாரம் நிறைவேற்றினோம். அதிலுள்ள பாதகமான விடயங்களை நானும் பிரதமரும் நீக்கினோம். ஐ. நா. மனித உரிமை பேரவைக்கு பயந்து முன்கூட்டி தேர்தல் நடத்தியவர்கள் எம்மீது குற்றஞ் சுமத்துகின்றனர். மனித உரிமை பேரவையின் சாரத்தை குறைத்து அதிலுள்ள பிரேரணைகளை செயற்படுத்தி வருகிறோம். மேலைத்தேயத்துக்கு ஏற்றவாறு நாட்டை செயற்படுத்துவதாக எம்மீது குற்றஞ் சுமத்தப்படுகிறது.
எந்த உலக சந்திக்கும் நாம் தலைசாய்க்க மாட்டோம். அவர்கள் கூறுவது போல ஒருபோதும் ஆட மாட்டோம்.
சர்வதேச பிரச்சினைகளில் இருந்து எமது நாட்டை மீட்போம் என உறுதியளிக்கிறோம். பாராளுமன்றத்தில் எமக்கு 2/3 பெரும்பான்மை உள்ளது. ஆட்சியை பிடிக்க சிலர் கனவு காண்கின்றனர். மேலும் 5 வருடங்கள் இந்த உடன்பாட்டு அரசாங்கம் தொடரும்.
2020இல் அதன் பின்னரான அரசாங்கம் குறித்து முடிவு செய்வோம். வெள்ளை வான் கலாசாரத்தை ஏற்படுத்தி, பல கோடி கொள்ளையடித்து மோசடி செய்வதர்களுக்கு மீண்டும் ஆட்சிக்கு வர ஒரு போதும் இடமளிக்க மாட்டோம். எம்மை துரத்த புதிய கட்சி அமைப்பதாக கூறுகின்றனர். வடக்கு, கிழக்கு, தெற்கு எங்கும் யாருக்கும் ஆயுதம் தூக்க முடியாதவாறு பலமான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம்.
நல்லட்சி கொள்கைக்குள் மோசடி. வீண் விரயம் இருக்க முடியாது. கடந்த ஆட்சியில் நடந்த தவறுகளுக்கு தண்டனை வழங்குவதோடுஎந்த அரசாங்கத்திலும் மோசடிக்கு லஞ்சத்துக்கு இடமளிக்கமாட்டோம். கடந்த ஆட்சியாளர்களுக்கு வழங்குவதை விட கூடுதல் தண்டனை வழங்குவோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply