ஈஷா மையத்தின் பள்ளி அனுமதியின்றி இயங்குவதாகப் புகார்

esaஆன்மீக குருவான ஜக்கி வாசுதேவின் ஈஷா மையம் நடத்திவரும் சம்ஸ்கிருதி பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு முறையான வகையில் கல்வி கற்பிக்கப்படவில்லையென்றும் போதுமான ஆவணங்கள் இல்லையென்றும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், குருகுல பாணியில் கல்வி கற்பிக்கப்படுவதால், அனுமதி தேவையில்லை என்கிறது ஈஷா.

கோவை மாவட்டத்தில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா சம்ஸ்கிருதி என்ற பெயரில் கல்விக்கூடம் ஒன்றை ஈஷா மையம் நடத்திவருகிறது.

 

இங்கு கற்பிக்கப்படும் கல்வி குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையத்திற்கு புகார்கள் வந்ததால், அது குறித்து விசாரிக்கும்படி மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்திற்கு அவை அனுப்பப்பட்டன.

 

இதையடுத்து இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த சம்ஸ்கிருதி பள்ளியில் மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையம் ஆய்வு ஒன்றை நடத்தியது.

 

“அந்த ஆய்வின்போது குழந்தைகளிடம் பேசினோம். அப்போது அங்கு களரி, பாட்டு, சமஸ்கிருதம், நடனம் போன்றவையே கற்பிக்கப்படுவதாக தெரியவந்தது. அந்தக் கல்விக்கூடம் எந்தப் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் கேட்டோம். ஆனால், அவர்கள் அதற்கு பதில் ஏதும் அளிக்கவில்லை” என பிபிசி தமிழோசையிடம் கூறினார் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை ஆணையத்தின் உறுப்பினரான ஜெயந்தி ராணி.

 

இந்த ஆவணங்களை அளிப்பதற்குப் போதுமான காலக்கெடு அளித்தும் அவர்கள் அதனை அளிக்கவில்லையென்றும் ஆகவே தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்திற்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருப்பதாக ஜெயந்தி ராணி கூறினார்.

 

இது தொடர்பாக ஈஷா மையத்திடம் கேட்டபோது, அவர்கள் பிபிசிக்கு எழுத்து மூலமாக அளித்த விளக்கத்தில், ஈஷா சம்ஸ்கிருதி என்பது வேதபாடசாலை என்றும் இங்கு வேத மந்திரங்கள், தேவாரம், திருவாசகம், இசை, நடனம், யோகா போன்றவற்றோடு வீர விளையாட்டுகளும் கற்பிக்கப்படுகின்றன என்று கூறியுள்ளனர்.

 

மேலும், மதரசாக்கள், வேதபாட பள்ளிகள், சமயக் கல்வியை முதன்மையாக வழங்கும் கல்வியமைப்புகள் இந்திய அரசியலமைப்பால் பாதுகாக்கப்படுவதாகவும் ஆகவே குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் இதில் குறுக்கிட முடியாது என்றும் ஈஷா மையம் விளக்கமளித்துள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply