இந்திய டி.வி. தொடரால் இரு தரப்பினரிடையே மோதல் 100 பேர் காயம்

Drama வங்காளதேசத்தில் பிரபல டி.வி. சேனல் ஒன்றில் “கிரன்மாலா” என்ற பெயரில் அறிவியல் சார்ந்த புனைகதை, தொடர் நாடகமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்திய படைப்பான இந்த நாடகத்துக்கு வங்காளதேசத்தில் மிகுந்த வரவேற்பு உள்ளது. வங்காள மொழியில் ஒளிப்பரப்படும் இந்த நாடகம் தீய சக்திகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் இளவரசி பற்றியதாகும்.

 

இந்த நிலையில் ஹபிகஞ்ச் மாவட்டத்தில் உள்ள டோல் என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் அங்கு உள்ள டீ கடையில் அமர்ந்து “கிரன்மாலா” தொடரை டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த 2 பேர் இந்த டி.வி. தொடர் குறித்து காரசாரமாக விவாதித்துக்கொண்டிருந்தனர். திடீரென அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றியது. அதனை தொடர்ந்து கைகலப்பு ஏற்படவே இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் உருட்டுக்கட்டைகளாலும், கத்திகளாலும் தாக்கிக்கொண்டனர்.

 

இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தாது தொடர்ந்து மோதிக்கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் அவர்களை விரட்டி அடித்தனர்.

 

இந்த மோதலில் சுமார் 100 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 15 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

கடந்த ஆண்டு, வங்காள தேசத்தில் 2 சிறுமிகள் தங்களுக்கு “கிரன்மாலா” தொடரில் வரக்கூடிய இளவரசி அணிந்திருப்பது போன்ற உடைகள் வேண்டும் என அவர்களது பெற்றோரிடம் கேட்டு உள்ளனர். ஆனால் அவர்களது பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் சிறுமிகள் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply