இலங்கை இராணுவத்தை குறைகூற பிரித்தானியாவுக்கு அருகதையில்லை: சம்பிக்க ரணவக்க

எமது இராணுவத்தினர் பொதுமக்களுக்குத் தீங்குவிளைவிப்பதாகக் குற்றஞ்சாட்டும் உரிமை பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் மிலிபான்டுக்கு இல்லையென சுற்றாடல் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் பாட்டலே சம்பிக்க ரணவக்க கூறினார். கடந்த காலங்களில் விரும்பத்தகாத போர் குற்றங்களில் ஈடுபட்டிருந்த பிரித்தானியா தற்பொழுது எமது இராணுவத்தினர் குறித்துக் குற்றஞ்சாட்டக் கூடாது என நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

“1982ஆம் ஆண்டு போஃக்லாண்டில் போராடிக்கொண்டிருந்த பிரித்தானியா ஒரு கப்பலிலிருந்த 3,000 ஆஜந்தீனியர்களைக் கொன்றது. சிறிது காலத்தின் பின்னர் செய்மதி உதவியுடன் எடுக்கப்பட்ட படங்களில் குறிப்பிட்ட கப்பல் பாதுகாப்பு வலயத்துக்குள் நின்றமை தெரியவந்தது. இந்தச் சம்பவத்துக்குப் பிரித்தானியா இதுவரை மன்னிப்புக் கோரவில்லை” என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் தொடரும் மோதல்களில் பலர் கொல்லப்பட்டுவரும் நிலையில் இலங்கை இராணுவத்தினருக்கு விரிவுரை நடத்த அமெரிக்காவும், பிரித்தானியாவும் முயற்சிப்பது நகைப்புக்கிடமானது என அவர் குறிப்பிட்டார்.

“1987இல் இந்தியா இலங்கை மோதல்களில் தலையிட முயன்றதைப்போல சர்வதேச சமூகம் தற்பொழுது முயற்சிக்கிறது. நாங்களே தியாகங்களைச் செய்து முன்னேறிச் சென்று விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துள்ளோம்” என்றார் அவர்.

கடந்த காலங்களில் முசோலினி மற்றம் ஹிட்டலர் ஆகியோர் சரணடைந்ததைப் போன்று தற்பொழுது பிரபாகரன் சரணடையும் காலம் தோன்றியிருப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply