மலேசிய தாக்குதல் பின்னணியில் ‘நாம் தமிழர் கட்சி’ஆதரவாளர்கள்
மலேசிய உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதலின் பின்னணியில் தமிழ் நாட்டை தளமாகக் கொண்ட நாம் தமிழர் கட்சியின் மலேசிய கிளை ஆதரவாளர்களேயிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று(06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இந்த சம்பவம் தொடர்பில் மலேசிய அரசாங்கத்திடம் அறிக்கை கோரியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கையர் எவரும் தாக்குதலுடன் தொடர்புபட்டிருக்கவில்லையென்றும் கூறினார்.
23/2 நிலையியற்கட்டளையின் கீழ் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன, மலேசிய உயர்ஸ்தானிகர் மீது நடத்திய தாக்குதல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மலேசிய உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதலை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தாக்குதல் நடத்தியவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கும் மலேசிய எதிர்க்கட்சியான ஜனநாயக செயல் கட்சி, இலங்கையில் யுத்தக்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. எனினும் யுத்தக்குற்றத்துக்கான அவசியம் இல்லையென்ற நிலைப்பாட்டை அவர்களுக்கு அறிவூட்ட குழுவொன்றை அனுப்பவிருப்பதாகவும் கூறினார்.
தினேஷ் குணவர்த்தன எம்பியின் கேள்விக்குப் பிரதமர் பதிலளித்தாலும் எதிர்க்கட்சி உறுப்பிர்கள் பலரும் கருத்துக்களைத் தெரிவித்தனர். இது குறித்த கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சபைக்குள் நுழைந்தார். ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் நடைபெற்ற கருத்துப்பரிமாற்றங்களை அவர் செவிமடுத்துக் கொண்டிருந்தார். இந்த வேளையில் “ஏதாவது பேசுகிறீர்களா ?” என பிரதமர் கேட்டபோது இல்லை என்று கைமூலம் சைகை காட்டியிருந்தமையை காணக்கூடியதாகவிருந்தது.
பிரதமர் தனது பதிலில் மேலும் கூறியதாவது, இலங்கைக்கான மலேசியத் தூதுவரை அழைத்து எமது அதிருப்தியை பதில் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ளார். வெ ளிநாடு செல்லும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்குத் தேவையான வசதிகளை வெ ளிவிவகார அமைச்சின் ஊடாக வழங்கி வருகிறோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொரியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்றபோது தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருந்தன. அவருக்கு வழங்கும் எந்த வசதியும் குறைக்கப்படவில்லை.
இவர்கள் செல்லும் நாடுகளிடம் தேவையான பாதுகாப்பை கோரமுடியும். வெளிநாடு செல்லும் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய அந்தந்த நாடுகளின் பொறுப்பாகும். மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.
ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்காக மலேசியாவுக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதிக்குத் தேவையான சகல வசதிகளையும் வழங்குமாறு அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதுவருக்கு அறிவிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக மாநாட்டு மண்டபத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதோடு விகாரை ஒன்றிலும் தாக்குதல் சம்பவமொன்றும் இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் ஐ.தே.க சார்பில் அமைச்சர் தயாகமகே, பிரதி அமைச்சர் அனோமா கமகேவும், மக்கள் ஐக்கிய முன்னணி சார்பில் தினேஷ் குணவர்த்தன எம்பியும், சுதந்திரக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டார்கள். இந்த மாநாடு முக்கியமானது என்பதாலேயே முன்னாள் ஜனாதிபதி குருநாகலில் நடைபெறும் கட்சி மாநாட்டில்கூட பங்கேற்காது மலேசியா சென்றார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சார்பில் யாராவது மாநாட்டுக்குச் சென்றிருந்தால் மாநாட்டு மண்டபத்துக்கு வெ ளியேதான் இருக்க நேர்ந்திருக்கும். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை யாரும் அங்கீகரிக்கவில்லை.
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து மலேசிய அரசாங்கம் விசாரணை நடத்தி வருகிறது. தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தென்னிந்தியாவில் செயற்பட்டுவரும் நாம் தமிழர் கட்சியின் மலேசிய கிளை ஆதரவாளர்களாவர். இந்தத் தாக்குதலுடன் ஒரு இலங்கையர் கூட தொடர்புபட்டிருக்கவில்லை. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர்களே இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
மலேசியாவில் செயற்படும் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் குறித்து கவனம் செலுத்தி வருகிறோம். இங்குள்ள புலி ஆதரவுக் குழுக்களுக்கு புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கே.பிக்கே அதிக தொடர்பு உள்ளது. அவர் கடந்த அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டவர். இந்தக் குழுக்கள் மலேசிய எதிர்க்கட்சியான ‘ஜனநாயக செயல் கட்சி’ (டி.ஏ.பி) யுடன் தொடர்புபட்டுள்ளன. மேற்படி கட்சி இலங்கையில் யுத்தக் குற்றம் நடைபெற்றமை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்திவருகிறது. யுத்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணை நடத்தும் தேவை கிடையாது என்பது குறித்து இந்தக் கட்சிக்கு தெளிவுபடுத்துவதற்காக குழுவொன்றை அனுப்பத் திட்டமிட்டிருக்கிறோம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதிப்பு ஏற்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது. அவர் தொடர்ந்தும் அரசியலில் இருக்க வேண்டும். அதற்கு நாம் அஞ்சவில்லை. அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் புலி உறுப்பினர்கள் பங்கேற்றிருக்கவில்லை. சில பிரிவினைவாத குழுக்களின் அச்சுறுத்தல் காணப்படுவதால் அவற்றுக்கு முடிவுகாண வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சகலரையும் பாதுகாக்க அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டு இன்றுடன் 70 வருடங்கள் நிறைவடைகின்றன. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்காக இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் தாய் நாடு என கட்சியின் ஆரம்ப நிகழ்வில் டி.எஸ்.சேனநாயக்க கூறியிருந்தார். நாம் லங்கா சுதந்திரக் கட்சியுடனும், ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் ஐக்கிய முன்னணி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடனும்இணைந்து நாடு முகங்கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தென்னிந்திய அரசியல் கட்சிகள் தமது அரசியலில் ஒரு அங்கமாக எமது பிரச்சினைகளை உள்வாங்கியுள்ளன. அவர்களையும் அறிவூட்டவேண்டும். எமது தனித்துவத்துடன் செயற்பட்டால் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தும் நிலைமை மாறும்.
மலேசிய தூதுவர் மீதான தாக்குதல் குறித்து மலேசிய அரசாங்கத்திடம் அறிக்கை கோரியிருக்கிறோம். அவர் மீது தாக்குதல் நடத்தியோருக்கு எதிராக முழுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியிருக்கிறோம். எமக்குத் தெரிந்த தகவல்களை அந்த நாட்டுக்கு வழங்கவிருக்கிறோம்.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அவரது பாதுகாப்புத் தொடர்பில் ஏதும் பிரச்சினை இருந்தால் அதற்கு தீர்வு வழங்கப்படும். முன்னாள் ஜனாதிபதி மலேசியா சென்றிருந்தபோது அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அவரின் பாதுகாப்புக்காக எத்தகையை நடவடிக்கை எடுக்கப்பட்டது என மலேசிய அரசாங்கத்தினாலேயே சரிவரக்கூற முடியும்.
அங்கு புலிக் கொடி ஏந்துவதை அந்நாட்டு அரசாங்கத்தால் தடுக்க முடியாது. மலேசிய எதிர்க்கட்சியான ஜனநாயக செயல் கட்சியுடன் தொடர்புள்ள குழுவே இவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்தியது. மலேசிய தூதுவர் மீதான தாக்குதல் தொடர்பில் மலேசிய அரசாங்கம் அறிக்கையொன்றை வெ ளியிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மலேசிய அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளதோடு நீதி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டோரை சட்டத்தின் முன் நிறுத்துவதாக உறுதியளித்துள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடக்காதிருக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் மலேசியா உறுதியளித்துள்ளது.
சில ஊடகங்கள் இந்த சம்பவத்தை பயன்படுத்தி தூண்டிவிட முயற்சி செய்கின்றன. ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இந்த சம்பவம் தொடர்பில் மலேசிய அரசாங்கத்தை மாத்திரம் குற்றஞ்சுமத்த முடியாது. சம்பவம் குறித்த மலேசிய அரசாங்கத்தின் அறிக்கை கிடைத்த பின்னர் அது குறித்து பாராளுமன்றத்தை அறிவூட்டவிருக்கிறோம் என்றார்.
பிரதியமைச்சர் அனோமா கமகே,
இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவந்த முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநாடு நடைபெற்ற உலக வர்த்தக கட்டடத்துக்கு முன்பாக விசேட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாட்டின் இரண்டாவது நாளும் இதேபோன்று பாதுகாப்பு ஒழுங்குகள் ஏற்கொள்ளப்பட்டிருந்தது. நானும் அமைச்சர் தயா கமகேவும், தினேஷ் குணவர்த்தனவும் நாடு திரும்புவதற்காக விமான நிலையம் வந்தபோதே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. உயர்ஸ்தானிகர் தனது பாதுகாப்பு தொடர்பில் பெரிதாக கவனம் எடுத்துக் கொண்டிருக்கவில்லை. இந்த நிலையிலேயே தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதிக்கு மலேசியாவில் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ.டி.சில்வா
முன்னாள் ஜனாதிபதிக்குத் தேவையான சகல வசதிகளும் வெ ளிவிவகார அமைச்சின் ஊடாக வழங்கப்பட்டது. ஆனால் உயர்ஸ்தானிகருக்கு போதிய பாதுகாப்பு கிடைத்திருக்கவில்லை. இது தொடர்பில் இலங்கையிலுள்ள மலேசிய தூதுவரை அழைத்து எமது அதிருப்தியை வெளியிட்டிருந்தோம்.
சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல
கடந்த ஆட்சியில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராகவிருந்த நோனிஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. ஆனால் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக
அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்காது. சகல இன மத மக்களும் ஒன்றாக வாழும் நிலையை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஐ.தே.கட்சிக்கு 70 வருடங்கள் நிறைவடைகிறது. அந்தக் கட்சி ஆட்சியில் இருக்கும்வரையில் இவ்வாறான சம்பவங்களுக்கு இடமளிக்காது.
ஐ.ம.சு.மு எம்பி பியல் நிஷாந்த
இந்தத் தாக்குதல் மிக மோசமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்துக்கு இப்பொழுது திருப்தியா?
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply