கேரளாவில் மாயமான இளைஞர்கள் ஐ.எஸ் இயக்கத்தினர் பகுதியை சென்றடைந்ததாக என்.ஐ.ஏ தகவல்
கேரளாவின் காசர்கோடு மற்றும் பாலக்காடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளம் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என 22 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென மாயம் ஆனார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள். மாயமானவர்களில் சிலர் தொழில்நுட்ப நிபுணர்களும் ஆவர். இவர்கள் சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் சென்று அங்கு ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தினர்.
காசர்கோடு மாவட்டத்தில் இருந்து 17 இளைஞர்கள் மாயமானது குறித்து காசர்கோடு பாராளுமன்ற தொகுதி எம்.பி. கருணாகரன் (மார்க்சிஸ்ட்) அண்மையில் முதல்–மந்திரி பினராயி விஜயனின் கவனத்துக்கும் கொண்டு சென்றார்.முதல்–மந்திரி பினராயி விஜயன், சட்டசபையில் அரசுக்கு கிடைத்துள்ள ஆரம்ப கட்ட தகவல்களின் அடிப்படையில் கேரளாவில் இருந்து மொத்தம் 21 பேர் மாயமாகி உள்ளனர். இவர்களில் 17 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், மற்ற நால்வரும் பாலக்காடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்கள் என கூறினார்.
இதற்கிடையே, மாயமான அனைவரும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்க பகுதிகளுக்கு சென்று சேர்ந்துவிட்டதாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பெங்களூரு, ஐதாராபாத், மும்பை ஆகிய விமான நிலையங்களில் இருந்து குவைத், மஸ்கட் , அபுதாபி ஆகிய இடங்கள் வழியாக ஆப்கானிஸ்தான் சென்று சேர்ந்துள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
இந்த தகவல்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் புறப்பட இருந்த யாஸ்மின் முகம்மது ஷாஹித்(29) என்ற பெண்ணை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து விசாரித்ததில் தெரியவந்ததாக அங்குள்ள வட்டார தகவல்கள் தெரிவித்தன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply