சம்பூர் அனல்மின் திட்டம் நிறுத்தம்

Parlament திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூரில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த அனல் மின் நிலையத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதில்லையென அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் அறி வித்துள்ளது. அரசாங்கம் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜென ரல் சஞ்ஜய் ராஜரட்ணம் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரியப்படுத்தினார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி அமரநாத் பட்டகொட எழுத்துமூலம் இதனை அறிவித்திருப்பதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் கூறினார். இதனைக் கருத்தில் கொண்டு சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை முடிவுக்குக் கொண்டுவர பிரதம நீதியரசர் கே.பவன் மற்றும் நீதியரசர் பிரசன்ன ஜயவர்த்தன ஆகியோர் தலைமையிலான நீதியரசர்கள் குழு தீர்மானித்தது.

 

திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூரில் அமைக்கப்படவிருக்கும் இரண்டாவது அனல் மின் நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இதில் நிலக்கரியைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வதற்கு எதிர்ப்பினை வெளியிட்டும் ‘சுற்றாடல் அறக்கட்டளை லிமிட்டட்’ நிறுவனம் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவில் இலங்கை மின்சார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு உள்ளிட்ட 11 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் முரண்பாடுகள் காணப்படுவதுடன், அனல் மின்நிலையம் அமைக்கப்பட்டால் நீண்டகால சூழல் மற்றும் சுகாதாரப் பாதிப்புக்கள் ஏற்படும் என மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர். அரசாங்கத்தின் நீண்டகால மின்னுற்பத்தி திட்டத்துக்கு இது ஏற்புடையதல்ல என்றும் குறிப்பிட்டிருந்தது.

 

சுகாதார ரீதியாக நிலக்கரியைப் பயன்படுத்துவது பொருத்தமல்ல என்றும், நுரைச்சோலை பகுதியில் ஏற்கனவே ஏற்பட்ட தாக்கங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன், எல்.என்.ஜீயுடன் ஒப்பிடும்போதும் ஏற்படக்கூடிய பொருளாதார நன்மைகள் தொடர்பிலும் இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உத்தேச சம்பூர் அனல்மின்நிலையமானது இலங்கை மின்சாரசபை மற்றும் இந்திய தேசிய அனல் மின் கூட்டுறவு லிமிட்டட் ஆகியவற்றின் இணைந்த வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்படவிருந்தது. இது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டிருந்தது.

 

அனல் மின்நிலையம் அமைக்கப்பட்டால் அதனால் வெளியிடப்படும் டொக்சைட் வாயுக்கள் கடலின் பல்லுயிர் தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

 

நேற்றையதினம் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன், வர்தானி கருணாரத்ன, கயந்த ஹேவாவசம் ஆகியோர் ஆஜராகியிருந்ததுடன், சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சஞ்ஜய் ராஜரட்ணம் ஆஜராகியிருந்தார்.

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply