கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படும் பிரச்சினை: நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் : டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் 

tamilisaiகர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து பா.ஜ.க. சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் எச்.வி.ஹண்டே, துணை தலைவர் சக்கரவர்த்தி, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், மீனவரணி தலைவர் சதீஷ் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

 

ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–

 

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழகத்தில் தேசிய ஒற்றுமையை நிலை நாட்ட வேண்டியது கடமை என்று கன்னடர்களுக்கு தேடி, தேடி பாதுகாப்பு கொடுத்துக் கொண்டு இருப்பதை பாராட்டுகிறேன். கர்நாடகாவில் தமிழர்களை தேடி, தேடி காயப்படுத்திக் கொண்டிருப்பதை தமிழக பா.ஜ.க. பார்த்து பொறுத்துக் கொண்டு இருக்காது.

 

காவிரி பிரச்சினையில் சட்டம்–ஒழுங்கு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லியும், கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத சித்தராமையாவுக்கு முதல்–மந்திரி பதவி வகிக்க தகுதி இல்லை. உடனடியாக அவர் பதவியில் இருந்து விலக வேண்டும்.

 

கர்நாடகா திரைப்படத்துறையினர் பிரிவினைவாதம் பேசுகிறார்கள். தமிழ் திரைப்படத்துறையினர் குறிப்பாக சகோதரர் ரஜினிகாந்த் இரு மாநிலங்களுக்கும் சொந்தம் கொண்டாடுபவர். அவரை போன்றவர்கள் இந்த விவகாரத்தில் குரல் கொடுக்க வேண்டும்.

 

கர்நாடகாவில் காவிரி பிரச்சினை, ஆந்திராவில் பாலாறு பிரச்சினை, கேரளாவில் முல்லை பெரியாறு பிரச்சினை இருக்கிறது. இவற்றிற்கு எல்லாம் ஒரே தீர்வு நதிகளை இணைப்பது தான் என்று அப்போதே வாஜ்பாய் திட்டமிட்டார். ஆனால் 10 ஆண்டுகள் காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு அதனை நடைமுறைப்படுத்தவில்லை.

 

நதிகளை இணைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று ராகுல்காந்தி கூறினார். இன்று சுற்றமும், நட்பும் பாதிக்கப்பட்டு வருகிறது. எதையும் இணைக்கக் கூடாது. பிரிக்க வேண்டும் என்பது தான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்படாக இருந்து வருகிறது.

 

கர்நாடகாவில் தமிழர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும். இரண்டு மாநில முதல்வர்களும் சந்தித்து பேசினால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் மத்திய அரசால் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது.  இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

 

ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. இளைஞரணி தலைவர் வினோஜ், ஊடக பிரிவு தலைவர் பிரசாத், நிர்வாகிகள் இரா.பிரகாஷ், திருப்புகழ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பட்டத்தின் போது கர்நாடகா முதல்–மந்திரி சித்தராமையா உருவ பொம்மையையும், படத்தையும் தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply