போர்ப்பிரதேசத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் சிரமங்கள்

வடக்கில் பெய்யும் மழை காரணமாக போர்ப்பிரதேசத்தில் காயமடைந்து புதுமாத்தளன் வைத்தியசாலைக்குச் செல்கின்ற காயமடைந்தவர்களையும், ஏனைய நோயாளர்களையும் பொறுப்பேற்று சிகிச்சையளிப்பதில் வைத்தியர்களும், ஊழியர்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.நேற்றிரவு காற்றுடன் தொடங்கிய மழை சிறிது நேர இடைவெளியின் பின்னர் தொடர்ச்சியாகப் பெய்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிய பாடசாலை கட்டிடம் ஒன்றில் செயற்பட்டு வருகின்ற புதுமாத்தளன் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு ஒரு மரத்திற்குக் கீழ் நிலத்தில் கூரை விரிப்புகளை விரித்து, மர நிழலிலேயே செயற்பட்டு வந்ததாகவும், தற்போது பெய்யும் மழை காரணமாக மரத்தடியில் வெளிநோயாளர் பிரிவைச் செயற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும், வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்றைய தினம் பெரும் எண்ணிக்கையில் காயமடைந்து இந்த வைத்தியசாலைக்குச் சென்றவர்களுக்கு முன்சிகிச்சை அளிப்பதற்குப் போதிய இடவசதியின்றி வைத்தியர்களும் பணியாளர்களும் பெரும் கஸ்டமடைந்திருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், பாதுகாப்பு வலயத்தினுள் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்கள் மழை காரணமாக கூடாரத்தி்ன் நிலம் ஈரமாகியிருப்பதனால் சொல்லொணாத கஷ்டத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply